- Advertisement -
சமையல் குறிப்புகள்

மாங்காயுடன் இந்த மசாலாவை சேர்த்து சமைத்து சுட சுட சாதத்துடன் சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையில் நீங்களும் அசந்து போய் விடுவீர்கள்

- Advertisement -

சாதத்துடன் சேர்த்து சாப்பிட எப்பொழுதும் சாம்பார், காரக்குழம்பு, மீன் குழம்பு இவ்வாறான குழம்பு வகைகளைத்தான் இதுவரையிலும் சமைத்து சாப்பிட்டிருப்போம். ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதற்காக வீட்டில் உள்ள பெண்கள் இன்று என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். இதற்காக எப்போதும் சாப்பிடும் குழம்பு வகைகளை தவிர்த்து சற்று வித்தியாசமாக மாங்காவை வைத்து சமைக்கும் இந்த சுவையான குழம்பை ஒருமுறை சமைத்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கிளிமூக்கு மாங்காய் – 1, சின்ன வெங்காயம் – 20, பச்சை மிளகாய் – 3, தனியாத்தூள் – 21/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 11/2 ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, கருவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் மாங்காயை சுத்தமாக கழுவிக் கொண்டு தோலை நீக்கி விட்டு நீள வாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அரை மூடி தேங்காயைத் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு, தேங்காய் முதல் பாலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காயின் இரண்டாம் பாலையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு கடாயில் அறிந்து வைத்துள்ள மாங்காயை சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பிறகு இதனுடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கையினால் நன்றாக கலந்துவிட வேண்டும். இவை அனைத்தையும் அடுப்பை பற்ற வைக்காமல் வெறும் கடாயில் தான் செய்ய வேண்டும்.

இவ்வாரு மசாலாக்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்ட பின்னரே அடுப்பை பற்ற வைத்து கடாயை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பின்னர் இந்த கலவையுடன் தேங்காய் அரைத்து எடுத்து வைத்துள்ள இரண்டாம் பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இவை நன்றாக கொதித்ததும் மீதமிருக்கும் தேங்காய் முதல் பாலையும் சேர்த்து லேசாக சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த மாங்காய் குழம்பு டன் சேர்க்க வேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி விட்டால் போதும் சுவையான கமகம வாசனையுடன் மாங்காய் குழம்பு தயாராகிவிட்டது. இந்த குழம்பு சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். நாவில் எச்சில் ஊறும் சுவையில் அசத்தலாக இருக்கும்.

- Advertisement -