
உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை பலரும் ஒதிக்கி மட்டுமே வைக்கின்றனர். ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படி சேர்த்துக்கொள்ளும் இந்த சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைக்காமல் விருப்பத்துடன் சாப்பிட வேண்டும். அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த உணவுகளை மிகவும் சுவையான விதத்தில் சமைத்து கொடுத்தால் அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அனைவரும் விரும்பக்கூடிய சுவையில் இருக்கும் முருங்கைக்கீரையுடன் துவரம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த முருங்கைக்கீரை சாதத்தை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – முக்கால் டம்ளர், முருங்கைக்கீரை – அரை கட்டு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒன்றரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் பச்சை அரிசியுடன் முக்கால் டம்ளர் துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் 2 வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு அரை கட்டு முருங்கைக்கீரையை சுத்தமாக உருவி அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து ஊற வைத்துள்ள அரிசி பருப்பை தண்ணீரை வடிகட்டி குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி முருங்கை கீரை, ஒன்றரை ஸ்பூன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் 7 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து, குக்கரை மூடி விடவேண்டும். சிறிது நேரத்தில் குக்கரில் பிரஷர் வந்ததும் குக்கர் விசில் போட்டு 5 விசில் வரும் வரை அப்படியே வேகவிடவேண்டும். விசில் வந்ததும் குக்கரை கீழே இறக்கி அதன் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து ஒரு முறை கிளறி விட வேண்டும்.
பின்னர் அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள முருங்கைக்கீரை சாதத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்கீரை சாதம் தயாராகிவிடும்.