- Advertisement -
சமையல் குறிப்புகள்

மிகவும் சுவையான உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய இந்தத் துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். நீங்களும் ஒருமுறை செய்து அசத்துங்கள்

- Advertisement -

காலையில் வடித்த சாதத்தை சாப்பிடுவதற்கும், மதியம் வடித்த சாதத்தை சுட சுட சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இவ்வாறு சாப்பிடும் பொழுது சுவையில் இருக்கும் மாற்றத்தையும் உணர முடியும். அப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பை செய்து சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக தான் இருக்கும். ஆனால் சாம்பார், குருமா, கார குழம்பு என்று தினமும் ஏதாவது ஒன்றை வைத்தாலும் மறுபடியும் தொடர்ந்து இந்த குழம்புகளையே செய்வதாக தோன்றும். எனவே சற்று வித்தியாசமாக இந்த கொள்ளு துவையலை ஒரு முறை செய்து பாருங்கள். சுட சுட சாதத்துடன் சேர்த்து, சிறிதளவு நெய் விட்டு பிசைந்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு – ஒரு கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 7 பல், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, தேங்காய் – கால் மூடி, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டினை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கால் மூடி தேங்காயைத் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 10 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இறுதியாக அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கலந்து விட்டு இவற்றை வேறு ஒரு தட்டிற்க்கு மாற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அதே கடாயில் ஒரு கப் கொள்ளு சேர்த்து நன்றாக சிவந்து வருமாறு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.

பிறகு மீண்டும் அடுப்பை பற்றவைத்து, கடாய் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள இந்த துவையலை சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொள்ளு துவையல் தயாராகிவிட்டது. இதை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் இதன் சுவை உங்கள் நாக்கிலேயே ஒட்டிக்கொள்ளும்.

- Advertisement -