- Advertisement -
சமையல் குறிப்புகள்

டேஸ்டியான ஒரப்படை எப்படி செய்வது? வித்தியாசமான இந்த அடை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செஞ்சு அசத்துங்க!

- Advertisement -

ஒரப்படை, உரப்பு அடை என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த அடை மரவள்ளி கிழங்கு அரைத்து தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். ரொம்பவே ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த அடை உறைப்பாகவும், செம்ம டேஸ்டியாவும் இருக்கும். உறைப்பாக இருக்கும் இந்த அடை உறைப்பு + அடை = ‘உரைப்படை’ என்று கூறுவார்கள். இது மருவி ஒரப்படை என்று ஆகிவிட்டது. தென்னிந்திய மாநிலங்களில் பிரசித்தி பெற்ற இந்த ஒரப்படை எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரப்படை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு கப், உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, வரமிளகாய் – 12, சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டு பல் – 10, மரவள்ளி கிழங்கு – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, துருவிய தேங்காய் – அரை கப், நறுக்கிய மல்லித்தழை மற்றும் கருவேப்பிலை – அரை கைப்பிடி, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ஒரப்படை செய்முறை விளக்கம்:
ஒரப்படை செய்வதற்கு முதலில் மரவள்ளி கிழங்கு ஒன்றை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து வடிக்கட்டி விட்டு மீண்டும் நல்ல தண்ணீர் ஊற்றி குறைந்த பட்சம் 2 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பிறகு இந்த அரிசி, பருப்பு வகைகளை நன்கு வடிகட்டி விட்டு மிக்ஸியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ற வரமிளகாயை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். சோம்பு, சீரகம் மற்றும் 10 பூண்டு பல்லை தோலுரித்து சேர்த்து நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த பின்பு நீங்கள் வெட்டி வைத்துள்ள மரவள்ளி கிழங்கு துண்டுகளையும் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த கலவையையும் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேருங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் சீவி விட்டு பொடி பொடியாக நறுக்கி தூவி விடுங்கள். துருவிய தேங்காய், சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழை மற்றும் கருவேப்பிலை இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அடை மாவு போல கெட்டியாக கலந்து கொள்ளுங்கள்.

அடுப்பில் தோசை கல் ஒன்றை வைத்து லேசாக சூடேற்றியதும் மாவை எடுத்து ஊற்றி அடை போல பரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றிலும் நன்கு தாராளமாக எண்ணெயை விட்டு பொன்னிறமாக இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நடுவில் ஓட்டை போட்டால் சீக்கிரம் வேகும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப ஈசியாக செய்யக்கூடிய இந்த ஒரப்படை செம டேஸ்டியாக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -