
பால் பாயாசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகையாகும். நம் வீடுகளில் ஏதாவது சிறிய விசேஷம் என்றாலே முதலில் நம் அம்மாக்கள் பால் பாயாசம் செய்து கொடுப்பார்கள். இந்த பால் பாயாசம் கீர் போன்ற சுவையில், ஆறினாலும் கெட்டியாகாமல் ஹை கிளாஸ் முறையில் ரொம்பவே சுலபமாக எப்படி நாம் செய்வது? அதன் சரியான அளவுகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – ஒரு லிட்டர், சேமியா – 70g, சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய் – 5, நெய் – 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்டு – 50 கிராம், பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு – தலா 5, உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்.
பால் பாயாசம் செய்முறை விளக்கம்:
முதலில் நட்ஸ் வகைகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காயவிடுங்கள். சூடான நெய்யில் நட்ஸ் வகைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த திராட்சைகளையும் சேர்த்து ஒருமுறை இலேசாக பிரட்டி விட்டு எடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக சேமியா வறுபட்டதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் எடுத்து வைத்திருக்கும் ஒரு லிட்டர் பாலை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பால் நன்கு கொதித்து வர கரண்டியை வைத்து கலந்து கொண்டிருங்கள். பால் நன்கு கொதித்து வந்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்க்க வேண்டும். பாலுடன் சேமியா நன்கு சேர்ந்து வெந்து வர வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டால் சேமியா வெந்து பால் கொஞ்சம் கெட்டியாகிவிடும்.
பின்னர் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தனியாக அரைத்தால் நைஸாக அரைபடாது. சர்க்கரை கரைந்ததும் நீங்கள் மில்க்மெய்டு சேர்க்க வேண்டும். மில்க்மெய்டு இல்லை என்றால் பரவாயில்லை, அது ஆப்ஷனல் தான். மில்க்மெய்ட் சேர்த்தால் பால் பாயாசத்தின் சுவை அருமையாக இருக்கும். மில்க்மெய்டு சேர்க்காதவர்கள் சர்க்கரையை உங்கள் தேவைக்கு ஏற்ப கூட்டிக் கொள்ளலாம்.
இப்போது சர்க்கரையுடன் தூளாக்கிய ஏலக்காயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பால் நன்கு கொதித்ததும் நீங்கள் வறுத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். நீங்கள் பாலை கிளறி விடும் பொழுது ஓரங்களில் படியும் ஆடைகளை அடிக்கடி எடுத்து விட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் இறுதியாக கொஞ்சம் நெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் ரொம்பவே சுவையான இந்த பால் பாயாசம் கீர் போன்ற சுவையை கொடுக்கும். நீங்களா செய்தீர்கள்? என்று ஆச்சரியப்பட்டு உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள்.