
இன்றைய உணவுமுறை அனைவருக்கும் பலமாக இருக்கிறதோ இல்லையோ பலவீனமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இப்பொழுது சாப்பிடும் அரிசியில் ஊட்டசத்துக்கு பதிலாக வேதியல் பொருட்கள் தான் அதிகமாக இருக்கின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் அறுவடை செய்த அரிசியை அப்படியே சாதத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இப்பொழுது அதனை பாலிஷ் செய்து, மெல்லியதாக இருந்தால் மட்டுமே சாப்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நாகரீகம் என்ற பெயரில் சாப்பிடும் உணவு முறையில் கூட மாற்றம் கொண்டு வந்தது, அனைவருக்கும் நோய்களைத் தான் கொடுக்கிறது. எனவே நமது பாரம்பரிய உணவுகளை தினமும் ஒரு வேளையாவது சாப்பிட்டு வாருங்கள். அப்பொழுதுதான் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களும் கரையும், உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். அவ்வாறு வல்லாரைக்கீரை, திணை, குதிரைவாலியில் செய்யக்கூடிய ஒரு கஞ்சியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
திணை அரிசி – அரை கப், குதிரைவாலி – அரை கப், புழுங்கல் அரிசி – கால் கப், வல்லாரை கீரை – ஒரு கொத்து, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் – கால் மூடி, எண்ணெய் – இரண்டு ஸ்பூன், பூண்டு – இரண்டு பல்.
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் அரை கப் குதிரைவாலி, அரை கப் திணை அரிசி மற்றும் கால் கப் புழுங்கல் அரிசி இவை மூன்றையும் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த அரிசியை குக்கரில் சேர்த்து அதனை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் 6 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும். பின்னர் 2 பல் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இவற்றுடன் சீரகம், மிளகு, தனியா தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு குக்கரை அடுப்பின் மீது வைத்து, மூடி போட்டு, குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட வேண்டும். அதன் பின்னர் 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரை இறக்கி வைத்து, பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து, மத்து இவற்றை நன்றாகக் கடைந்து விட வேண்டும்.
பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மீதமுள்ள சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, அவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து வல்லாரைக் கீரை சேர்த்து வதக்கி விட்டு, இந்த தாளிப்பை கஞ்சியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சிறுதானிய கஞ்சி தயாராகிவிட்டது.