
நமது தாத்தா பாட்டி மற்றும் அம்மா அப்பா காலம் தொட்டு, இன்று நாம், நமது பிள்ளைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் டீக்கடையில் செய்யப்படும் வடையும் ஒன்று. எங்காவது வெளியில் சென்றால் போதும் களைப்பு தீரவும், பொழுது போக்கிற்காகவும் டீக்கடையில் போடப்படும் மசால்வடை விருப்பமாக சாப்பிடுவது அனைவரின் வழக்கமாக இருக்கிறது. இதன் சுவை வீட்டில் செய்வதை விட சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கிறது. பலரும் பல வகையில் முயற்சி செய்தாலும் இப்படி டீ கடையில் கிடைக்கும் அதை சுவையில் மசால் வடையை வீட்டில் செய்ய முடிவதில்லை. ஆனால் இந்த சிறிய குறிப்புகளை தெரிந்து கொண்டால் போதும். நீங்களும் அதே சுவையில் இந்த வடையை செய்யமுடியும். வாருங்கள் இப்படி சுவையான மசால்ல் வடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 4, வர மிளகாய் – 2, சோம்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், பூண்டு – 6 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 200 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு கடலை பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்த கடலை பருப்பிலிருந்து ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பிறகு மீதமிருக்கும் கடலைப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வறுத்த சோம்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகை ஒரு சிறிய உரலில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 6 பல் பூண்டையும் உரலில் சேர்த்து தட்டி வைக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய் ,வர மிளகாய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை பொடியாக நறுக்கி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இறுதியாக எடுத்து வைத்துள்ள ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி, எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான டீக்கடை மசால்வடை தயாராகிவிட்டது.