
சில டீக்கடைகளில் எண்ணெய் குடிக்காத இனிப்பு போண்டா மிகவும் சுவையாக இருக்கும். அடிக்கடி கடையிலிருந்து அதை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வெளியில் கிடைக்கும் இனிப்பு போண்டா அவ்வளவு ஆரோக்கியமானதா என்று கேட்டால், நிச்சயமாக நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த போண்டா ஆரோக்கியமான போண்டா என்று. உங்களுடைய வீட்டில் உங்கள் கையால் உங்கள் குழந்தைகளுக்கு இந்த இனிப்பு போண்டாவை பக்குவமாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். டீ டைமுக்கு 2 போண்டா சாப்பிட்டா சூப்பரா இருக்கும். கடையில் வாங்கிக் கொடுக்காமல் நம் கையால் செய்து கொடுத்த திருப்தியும் நமக்கு கிடைக்கும் அல்லவா. சரி வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா 1 கப் (175 கிராம்), பொடித்த சர்க்கரை – 3/4 கப் (75 கிராம்), ரவை – 2 ஸ்பூன், புளித்த தோசை மாவு – 1/2 கப், ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை கரைத்து போண்டா மாவு பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மாவை ரொம்பவும் கட்டியாக பிசைய கூடாது. ரொம்பவும் தண்ணீர் பக்குவத்திலும் கலந்து விடக்கூடாது. கட்டியாக பிசைந்து விட்டால், போண்டாவுக்கு உள்ளே வேகாது. தண்ணீராக கரைத்து விட்டால் எண்ணெய் நிறைய குடித்துவிடும். பக்குவம், தண்ணீர் ஊற்றி மாவை கரைப்பதில் தான் உள்ளது. இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக மாவு இருக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு, தயாராக இருக்கும் மாவில் இருந்து சிறிய அளவு மாவை அப்படியே உங்கள் கைகளால் அள்ளி, எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இதில் சர்க்கரை சேர்த்து இருப்பதால் தீயை அதிகமாக வைத்து போண்டாவை சுட்டெடுத்தால் மேலே சீக்கிரம் சிவந்து விடும். உள்ளே வேகாமல் இருக்கும். (கையில் மாவு ஒட்டாமல் இருக்க லேசாக கையை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்).
மிதமான தீயில் பக்குவமாக பொன்னிறம் வரும் வரை போண்டாவை சுட்டு எடுக்க வேண்டும். போண்டாவின் வடிவம் சரியான உருண்டையாக நமக்கு கிடைக்காது. நன்றாக ஆற வைத்து விட்டு அதன் பின்பு சாப்பிட்டு பாருங்கள். மேலே மொறுமொறுவென உள்ளே பஞ்சு போல சாஃப்டாக, சூப்பரா இருக்கும். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். மைதா மாவு ஆரோக்கியத்திற்கு கேடு என்றால், இதை கோதுமை மாவிலும் செய்யலாம். இருப்பினும் டீ கடை போண்டா மைதா மாவில் தானே இருக்கும்.
வெறும் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, தோசை மாவு, ரவை இந்த 4 பொருட்களை சேர்த்து மாவை கரைத்து விடுங்கள். உங்களுக்கு இந்த மாவின் அளவு அதிகமாக இருக்கும் என்றால், பாதி மாவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். தேவையான மாவில் மட்டும் ஏலக்காய் பொடி பேக்கிங் சோடா சேர்த்து போண்டாகளை சுட்டு எடுத்துக்கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்த மீதமான மாவை அடுத்த நாள் சுடுவதற்கு முன்பு, ஏலக்காய் பொடியையும் பேக்கிங் சோடாவையும் சேர்த்து கலந்து போண்டாவை சுட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.