- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

கடவுள் வாயில் மதுவை ஊற்றும் வினோத கோவில்

பெரும்பாலான கோவில்களில் திருநீறு குங்குமம் போன்றவற்றை தான் பிரசாதமாக கொடுப்பது வழக்கம். சில விசேஷ நாட்களில் பொங்கல், புளியோதரை போன்றவற்றையும் கொடுப்பார்கள். அனால் இதற்கு நேர் எதிராக, பக்தர்களுக்கு மதுபானங்களை பிரசாதமாக கொடுக்கும் விசித்திரமான கோவில் ஒன்று உள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ளது கால பைரவர் கோயில். இந்த கோவில் பத்ராசன் என்னும் மன்னரால் கட்டப்பட்டது என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் உள்ள கால பைரவர் சிலைக்கு வெறும் மதுபானங்களை மட்டுமே படையலாக வைக்கின்றனர். அதோடு இறைவனின் வாயிலும் சிறிது மதுவை ஊற்றுகின்றனர். அதேபோல் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் மதுவே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

பைரவர் அவதாரம்
அனைத்து சிவன் கோவில்களிலும் பைரவர் காவல் தெய்வமாக காட்சியளிக்கின்றார். சிவன் கோவில்களில் பைரவர் வழிபாடு ஒரு முக்கிய அம்சம் வாய்ந்தது. மந்திர தந்திரங்கள், வேதாளங்கள், பூதங்கள், பிரேத பிசாசு இவைகளுக்கு தலைவராக விளங்குபவர் பைரவர். இவைகளிடமிருந்து மக்களை காப்பவர் பைரவர். அந்தகாசுரன் என்னும் அசுரன் பஞ்சாக்னி நடுவே சிவனை நினைத்து வரம் வேண்டி பெற கூடாத வரங்களை எல்லாம் பெற்று விட்டான். இதனால் அவனின் தலைக்கனம் அதிகமாகி அவனது அட்டகாசம் பூலோகத்தில் தலை விரித்து ஆடியது. அவனை பிரம்மனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தன்னால் வரம்பெற்ற அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை உருவாக்கி அசுரனை அழிக்க வழி செய்தார். உக்கிரமும் கோபம்கொண்ட பைரவர் பல அரக்க படைகளை வீழ்த்தி, இறுதியாக அந்தகாசுரனை சூலத்தினை கொண்டு குத்தி சூரனை வதம் செய்தார். இதனால் பூலோகத்தில் வாழ்ந்த முனிவர்களும், மக்களும் நிம்மதி அடைந்தனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி திதி அன்றுதான் பைரவரின் அவதாரம் தோன்றியிருக்கிறது. இதனால் பைரவர் வழிபாட்டுக்கு இந்த நாள் மிகவும் சிறந்தது. சிவன் கோவில்களில்  ஷேத்திரபாலகனாக வீற்றிருக்கும் காலபைரவர், சில கோவில்களில் தனி மூலவராக திகழ்கின்றார். அப்படிப்பட்ட ஒரு கோவில்களில் ஒன்றுதான் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் இருக்கும் புகழ்பெற்ற காலபைரவர் திருக்கோவில். இது  ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நீண்ட சடையுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் சாதுக்கள் கோயிலைச் சுற்றி வலம் வருவதை சுலபமாக காணலாம்.

- Advertisement -

பழங்காலத்தில் இங்குள்ள கால பைரவருக்கு 5 வகையான படையல்கள் போடப்பட்டுள்ளன. அதில் கறி, மீன், மது உள்ளிட்டவையும் அடக்கம். அனால் தற்போது இங்கு வெறும் மதுவை மட்டுமே படைக்கின்றனர். கோவில்களுக்கு வெளியில் நாம் பூ, பழம் வெற்றிலை பாக்கு போன்றவற்றை விற்றுதான் பார்த்திருப்போம். அனால் இங்கு பூ, பழத்தோடு சேர்த்து பாட்டில்களில் மதுவையும் விற்கின்றனர்.

பக்தர்கள் கொண்டு செல்லும் மது பாட்டில்களை அந்த கோவில் பூசாரி வாங்கி அதை கால பைரவரின் வாயருகே கொண்டு சென்று சிறிது ஊற்றிவிட்டு மீதமுள்ளதை பக்தர்களிடம் கொடுக்கிறார். கால பைரவர் வாயருகே கொண்டு சொல்லும் மதுபாட்டில்களில் இருந்து மூன்றி ஒரு பங்கு மதுவை அவர் தானே குடிப்பதாக நம்பப்படுகிறது. அனால் இதை தெளிவாக ஆய்வு செய்ய அங்குள்ள பூசாரிகள் அனுமதிப்பதில்லை.

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று கூறிவரும் இந்த காலகட்டத்தில் கடவுளுக்கே தினமும் லிட்டர் லிட்டராக மதுவை ஊற்றுவது சற்று வியப்பாகத்தான் உள்ளது. எதனால் இத்தகைய ஒரு விநோத பழக்கம் அந்த கோவிலில் பின்பற்றப்படுகிறது ? இதற்கு மாற்று வழி ஏதேனும் உண்டா? என்பதெல்லாம் கட்டாயம் ஆராய வேண்டிய விஷயம்.

- Advertisement -