- Advertisement -
சமையல் குறிப்புகள்

4 பொருள் இருந்தா போதும் இட்லி, தோசைக்கு இந்த மாதிரி ஒரு சுவையான சட்னி இருக்கவே முடியாது!

- Advertisement -

இட்லி, தோசைக்கு என்னடா சட்னி அரைப்பது? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது சட்டுனு 4 பொருள் இருந்தா போதும் சூப்பரான சட்னி அரைச்சு வச்சுடலாம். காலையில் எழுந்ததும் கடகடவென பரபரத்துக் கொண்டிருக்கும் அவசரத்தில் இந்த சட்னி வச்சி கொடுத்து பாருங்க ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க! சுவையான தேங்காய் சேர்த்த வெங்காய தக்காளி சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெங்காயம் தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2 வரமிளகாய் – நான்கு, கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

வெங்காயம் தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் இரண்டை தோல் நீக்கி விட்டு பின்னர் நன்கு சுத்தம் செய்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, கொத்தமல்லி போன்றவற்றையும் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை ஒரு கைப்பிடி அளவிற்கு துருவி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி செய்வதற்கு நல்லெண்ணெய் தான் ரொம்பவும் ருசியானதாக இருக்கும் எனவே நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஊற்றி ஒரு வாணலியில் நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை உதிர்த்து சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதங்கிய பின்பு அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து மசிய வதக்க வேண்டும். பிறகு காரத்திற்கு வரமிளகாய் சேர்க்க வேண்டும். காஷ்மீரி மிளகாய் இருந்தால் நல்ல நிறம் எடுத்துக் கொடுக்கும் எனவே காஷ்மீரி மிளகாய் இருந்தால் கூடுதலாக இரண்டு மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் நீங்கள் சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி தழை மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். தேங்காய் துருவல் சேர்த்த பின்பு நீண்ட நேரம் வதக்க வேண்டியதில்லை, ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணையை காய விடுங்கள். நல்லெண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலையை போட்டு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னியில் கொட்டி நன்கு கலந்து விடுங்கள். செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி தக்காளி வெங்காய சட்னி ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -