
பிரிஞ்சி, பிரியாணி, தக்காளி சாதம், தேங்காய் சாதம் இதுபோன்ற கலவை சாதங்கள் அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் ஆகும். அவ்வாறு பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களும் அடிக்கடி வீட்டில் செய்வது வெஜிடபிள் பிரியாணியை தான். ஆனால் ஒரு சிலருக்கு இதனை சரியான பக்குவத்தில் செய்யத்தெரியாதது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் வெஜிடபிள் பிரியாணியின் சுவை அவ்வளவு விருப்பமானதாகவும் இருக்காது. ஆனால் ஹோட்டல்களில் செய்யும் வெஜிடபிள் பிரியாணி போலவே நமது வீட்டிலும் செய்யக்கூடிய வெஜிடபிள் பிரியாணி சுவையாக இருக்க இந்த தலப்பாகட்டி பிரியாணி மசாலாவை சேர்த்து செய்து பாருங்கள். தலப்பாகட்டி பிரியாணி போன்றே மிகவும் அசத்தலாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி – 5 டம்ளர், பீன்ஸ் – 10, கேரட் – 3, பச்சை பட்டாணி – 50 கிராம், கொத்தமல்லி – ஒரு கட்டு, புதினா – ஒரு கட்டு, இஞ்சி – 50 கிராம், பூண்டு – 50 கிராம், சின்ன வெங்காயம் – 20, பச்சை மிளகாய் – 8, பிரிஞ்சி இலை – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, அன்னாசிப்பூ – 3, பட்டை – 4 துண்டு, கல்பாசி – 2 ஸ்பூன், ஜாதிக்காய் பொடி – அரை ஸ்பூன், உப்பு – 2 ஸ்பூன், எண்ணெய் – 10 ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பிரிஞ்சி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, ஜாதிக்காய் பொடி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பவுடர் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சீரக சம்பா அரிசியை தண்ணீர் ஊற்றி கழுவி 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது வைத்து, குக்கரை வைத்து, 8 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதனுடன் 3 ஸ்பூன் நெய்யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நன்றாக சூடானதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ளகாய்கறிகளள் மற்றும் புதினா கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்களை வேக வைக்க வேண்டும். அதன் பின்னர் 8 டம்ளர் தண்ணீர் சேர்த்து இவை நன்றாக கொதித்ததும் சீரக சம்பா அரிசியையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி போட்டு மூட வேண்டும்.
சிறிது நேரத்தில் குக்கரில் பிரஷர் வர ஆரம்பித்ததும் விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். பிறகு சரியாக 7 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். அதன் பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டால் போதும். சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி வெஜிடபிள் பிரியாணி தயாராகி விடும்.