- Advertisement -
சமையல் குறிப்புகள்

மீந்து போன இடியாப்பத்தை வைத்து தாளித்த இடியாப்பம் இப்படி செய்யலாம்

- Advertisement -

தாளிச்ச இடியாப்பம் | Thalicha idiyappam recipe in Tamil

இடியாப்பம் வீட்டில் செய்யும் பொழுது சில சமயங்களில் மீந்து போய் விடுகிறது. இப்படி மீந்து போன இடியாப்பத்தை ஆறிய பின்பு சாப்பிட யாருக்கும் பிடிக்காது. அப்படி இருக்கும் பொழுது இப்படி ஒரு முறை தாளிச்சு செஞ்சு பாருங்க, தட்டில் ஒரு பருக்கை கூட இருக்காது, எல்லாமே காலியாகி விடும். தேங்காய்ப்பால், சட்னி, சாம்பார் எதுவுமே இதற்கு வேண்டாம். சூப்பரான தாளிச்ச இடியாப்பம் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

இடியாப்பம் – 5, சமையல் எண்ணெய் – மூன்று டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – ஒன்று, பீன்ஸ், கேரட், குடைமிளகாய், பட்டாணி கலவை – அரை கப்.

- Advertisement -

செய்முறை

தாளிச்ச இடியாப்பம் செய்வதற்கு முதலில் ஐந்து இடியாப்பத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் இடியாப்பத்தின் அளவை பொறுத்து தாளிப்பையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எடுத்து வைத்துள்ள இடியாப்பத்தை துண்டு துண்டாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் தாராளமாக ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் நன்கு பொன்னிறமாக வறுபட்டதும் சீரகம், மஞ்சள் தூள், காரத்திற்கு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தாளிப்புக்கு ஒரு கொத்து கருவேப்பிலை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து வதக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குவது நல்லது. இவை அனைத்தும் நன்கு வதங்கி வர கொஞ்சம் போல உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே இடியாப்பத்தில் உப்பு இருக்கும் எனவே பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ஒமேகா 3, கால்சியம் நிறைந்துள்ள பருப்பு கீரை கடையல் அடிக்கடி இப்படி எளிதாக செஞ்சு சாப்பிடுங்க! பசுமை நிறம் மாறாமல் கீரையை கடைவது எப்படி?

ஓரளவுக்கு நன்கு வதங்கி வந்த பின்பு பிரித்து வைத்துள்ள இடியாப்ப துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். தாளிப்பு பொருட்கள், காய்கறிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்து விடும்படி அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் நன்கு பிரட்டி விடுங்கள். அதன் பிறகு நறுக்கிய மல்லி தழை தூவி அப்படியே பரிமாற வேண்டியதுதான். சூப்பராக இருக்கக்கூடிய இந்த தாளிச்சு செய்த இடியாப்பத்திற்கு தொட்டுக்க கூட எதுவுமே தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -