
உலகப் புகழ்பெற்ற ரெசிபிக்களில் இந்த தஞ்சாவூர் சாம்பாரும் ஒன்று. அப்படி என்ன அந்த தஞ்சாவூர் சாம்பாரில் ஸ்பெஷல்? அவர்கள் அந்த சாம்பாரில் சேர்க்கும் சாம்பார் பொடியும் ஒன்று. இப்போதெல்லாம் ரெடிமேட் ஆகவே தஞ்சாவூர் சாம்பார் பொடி என்று கடைகளில் விற்கிறது. இருப்பினும் அந்த தஞ்சாவூர் சாம்பார் பொடியை மணக்க மணக்க நம் வீட்டிலேயே எப்படி அரைப்பது. தஞ்சாவூர் சாம்பார் பொடியின் ஸ்பெஷல்தான் என்ன. வாங்க நேரத்தைக் கடத்தாமல் தஞ்சாவூர் சாம்பார் பொடி ரெசிபியை எப்படி அரைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
முதலில் இந்த சாம்பார் பொடிக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். வரமல்லி 1/2 கிலோ, துவரம்பருப்பு – 200 கிராம், உளுத்தம் பருப்பு – 200 கிராம், கடலை பருப்பு – 200 கிராம், சீரகம் – 100 கிராம், வெந்தயம் – 50 கிராம், கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு, மிளகு – 50 கிராம், பெருங்காயம் – 5 கிராம், வரமிளகாய் – 1/2 கிலோ.
கிட்டத்தட்ட நம்முடைய சாம்பார் பொடிக்கும் இதே அளவுகளில் தானே மசாலா பொருட்களை பயன்படுத்துவோம் என்று நினைக்கிறீர்களா. ஆனால், இந்த மசாலா பொருட்களை வறுத்து எடுப்பதில் சில நுணுக்கங்கள் உள்ளது. அவை என்னென்ன என்று தெரிந்தால் தான் தஞ்சாவூர் சாம்பார் பொடியின் ருசியை நம்மால் சுவைக்க முடியும்.
முதலில் 1/2 கிலோ அளவுவரமல்லியில் இருந்து 1/4 கிலோ மட்டும் வறுப்பதற்கு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமிருக்கும் 1/4 கிலோ வர மல்லியை வறுக்காமல் அப்படியே சாம்பாரில் போட்டு அரைக்கவேண்டும்.
அடுத்தபடியாக துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, இந்த 6 பொருட்களையும் எண்ணெய் ஊற்றாமல் ஒவ்வொன்றாக கடாயில் போட்டு கருகாமல் பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் கருகி விட்டால் கூட, சாம்பாரில் கருகிய வாடை வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அடுத்தபடியாக மிளகு. இந்த மிளகை 1/4 ஸ்பூன் நெய் ஊற்றி வறுக்க வேண்டும். நெய்யில் மிளகு வறுபட்டு மணக்க மணக்க வாசம் வரும் வரை நன்றாக பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக பெருங்காயம். பெருங்காயத்தை 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வறுக்க வேண்டும். கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக அந்த கடையிலேயே வரமிளகாயை போட்டு சூடுபடுத்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது எல்லா பொருட்களையும் வறுத்து எடுத்து வைத்திருக்கின்றோம். வறுத்த எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வெயிலில் காய வைத்து, மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த சாம்பார் பொடியின் வாசம் வித்தியாசமாக இருக்கும்.
நெய்யில் மிளகை வறுப்பது, நல்லெண்ணையில் பெருங்காயத்தை வறுத்து, 1/4 கிலோ அளவு மரமல்லியை வறுக்காமல் அப்படியே சாம்பாரில் போடுவது என்று இந்த சின்ன சின்ன குறிப்புகள்தான் தஞ்சாவூர் சாம்பார் பொடிக்கு தனி வாசத்தை கொடுக்கின்றது. உங்களுக்கு இந்த சாம்பார் பொடி ரெசிபி பிடித்திருந்தால், உங்க வீட்லயும் ஒருவாட்டி இப்படி பொடி அரைத்த சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார் கமகமக்கும். தஞ்சாவூர் சாம்பாரின் மணம் உங்கள் வீட்டு சாம்பாரிலும் வீசும்.