
அமாவாசை திதி என்றதும் நம் நினைவிற்கு வருவது முன்னோர்களின் வழிபாடுதான். முன்னோர்களின் வழிபாட்டோடு சேர்த்து ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். எந்த அளவிற்கு இவர்களின் வழிபாடு முக்கியமோ அதே அளவிற்கு மகாலட்சுமி தாயாரின் வழிபாடும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. சந்திரனின் அம்சம் பொருந்திய நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அந்த வகையில் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு அமாவாசை நாளன்று செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி தாயாருக்கு உரிய கிழமைகளாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. இந்த கிழமைகளை லட்சுமிகரமான கிழமை என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபாடு செய்தோம் என்றால் அமாவாசை முடிந்து நிலவு எப்படி வளர்ந்து கொண்டே செல்கிறதோ, அதே போல் நம்முடைய செல்வ செழிப்பும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் வைகாசி மாதத்தின் அமாவாசை என்பது செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி வரை இருக்கிறது. அதனால் இந்த மகாலட்சுமி பூஜையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து 9 மணிக்குள் நாம் செய்து விட வேண்டும். இந்த மகாலட்சுமி பூஜைக்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று என்றால் அது துளசி செடிதான். துளசி செடியை பலரும் தங்களுடைய வீட்டில் தொட்டியில் வைத்து வளர்ப்பார்கள், ஒரு சிலர் துளசி மாடம் கட்டி வைத்து அதில் வைத்து வளர்ப்பார்கள். துளசி பூஜை செய்வது என்பது மகாலட்சுமியை மட்டுமல்லாமல் மகாவிஷ்ணுவையும் சேர்த்து வழிபாடு செய்வதற்குரியதாகவே திகழ்கிறது. துளசி பூஜை செய்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்கும், கர்ம வினைகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி பூஜையை அமாவாசை தினத்தில் செய்யும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.
காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பெண்கள் லட்சுமி கரமாக தயாராக வேண்டும். லட்சுமி கரமாக தயாராக வேண்டும் என்றால் சுத்தமான புடவை கட்டி, தலை சீவி, பூ வைத்து, நெற்றிலும் உச்சியிலும் குங்குமம் வைத்து, கையில் வளையல், காலில் கொலுசு, மெட்டி போன்ற மங்களகரமான சின்னங்கள் அனைத்தையும் அணிந்து கொண்டு இந்த பூஜையை செய்தால் தான் அதற்குரிய முழுமையான பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்களும் மகாலட்சுமிக்கு ஒப்பானவர்கள் என்றும் அவர்கள் மகாலட்சுமி அம்சத்துடன் இருந்து செய்யக்கூடிய எந்த ஒரு பூஜையும் வெற்றிகரமாகவே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதனால் பெண்கள் லட்சுமி கரமாக தயாராகி இந்த பூஜையை செய்ய வேண்டும்.
வீட்டில் இருக்கக்கூடிய துளசி மாடத்தை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு துளசி செடிக்கு முதலில் சாதாரண தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு பிறகு மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். பிறகு துளசி செடியில் சிறிதளவு மஞ்சளையும் குங்குமத்தையும் போட்டு விட்டு, மலர்களை சமர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு துளசி செடிக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை கிழக்கு பார்த்தவாரோ அல்லது வடக்கு பார்த்தவாரோ ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு பொருளை துளசி செடிக்கு வைக்க வேண்டும். எதுவுமே இல்லை என்றால் கூட பரவாயில்லை வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை கூட நெய்வேத்தியமாக வைக்கலாம்.
பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி முடித்த பிறகு துளசி செடியை 108 முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வரும் பொழுது “ஓம் லக்ஷ்மி துளசியே போற்றி” என்னும் நாமத்தை கூறிக் கொண்டே வலம் வர வேண்டும். 108 முறை வலம் வந்த பிறகு திரும்பவும் கற்பூர தூப தீப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த பூஜையை லஷ்மி துளசிக்கும் செய்யலாம் விஷ்ணு துளசி என்று கூறக்கூடிய கருந்துளசிக்கும் செய்யலாம். அல்லது இரண்டு துளசிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து செய்யும் பொழுது இந்த வழிபாட்டின் பலன் கூடுதலாகவே கிடைக்கும். இந்த வைகாசி அமாவாசை தொடங்கி தொடர்ச்சியாக மூன்று அமாவாசை யார் ஒருவர் இந்த முறையில் அமாவாசை தினத்தில் துளசி பூஜை செய்து வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கும். மகாலட்சுமி நித்தியவாசம் புரிவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இதையும் படிக்கலாமே:திங்கட்கிழமை அமாவாசை காலை சொல்ல வேண்டிய மந்திரம்
எளிமையான பூஜையாக இருந்தாலும் பலவிதமான அற்புத பலன்களை தரக்கூடிய பூஜையாக தான் இந்த பூஜை திகழ்கிறது. முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த துளசி பூஜையை அமாவாசை தினத்தில் செய்து அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.