- Advertisement -
சமையல் குறிப்புகள்

வித்தியாசமான சுவையில் தேங்காய்ப்பால் வெஜிடபிள் குழம்பு செய்வது எப்படி?

- Advertisement -

தேங்காயை பெரும்பாலும் காரம் குறைவாக இருப்பதற்கும், உணவில் லேசான இனிப்பு சுவையை கொடுப்பதற்கும் பயன்படுத்துகின்றோம். ஒரு பொறியலை கூட சாதாரணமாக சமைப்பதை விட தேங்காய் சேர்த்து சமைக்கும் பொழுது அதன் சுவை சற்று மிகுதியாகவே இருக்கும். தேங்காயை உணவில் சேர்த்து சாப்பிட, சூட்டின் காரணமாக உண்டாகும் வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு நல்ல பலனளிக்கும். இப்படி பல நன்மைகளை கொண்ட தேங்காயில் இருந்து எடுக்கும் தேங்காய் பால் வைத்து சமைக்கும் வெஜிடபிள் குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வெஜிடபிள் தேங்காய் பால் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பால் – 100 மில்லி, முருங்கைக்காய் – ஒன்று, கேரட் – ஒன்று, பீன்ஸ் – 10, துவரம் பருப்பு – 100 கிராம், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.

- Advertisement -

தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:
முதலில் பீன்ஸ், கேரட், முருங்கைக் காய் இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். புளியை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு குக்கரில் துவரம் பருப்புடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கர் 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கடாயில் கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உப்பு, கரம் மசாலா, சாம்பார் பொடி இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். சிறிது நேரம் கொதித்து காய்கள் நன்றாக வெந்ததும் அவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து, பருப்பு காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை ஐந்து நிமிடங்கள் சிறிய தீயில் வேக விட வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு குழம்பு சூடாக இருக்கும் பொழுதே தேங்காய் பால் சேர்த்து, ஒருமுறை கலந்து விட்டு சிறிது நேரம் அப்படியே மூடி வைக்க வேண்டும். பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இறுதியாக தாளித்த பொருட்களையும் சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் குழம்புடன் சேர்த்து விட்டால் போதும். சுவையான மணமணக்கும் தேங்காய்ப் பால் வெஜிடபிள் குழம்பு தயாராகிவிடும்.

தேங்காய் பால் வெஜிடபிள் குழம்பை இட்லி, தோசையுடனும், சாதத்துடனும் சேர்த்து சாப்பிட இதன் சுவையில் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதே தெரியாத அளவிற்கு சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். நீங்களும் ஒரு முறை இந்தக் குழம்பை முயற்சித்துப் பாருங்கள். அதன் பிறகு இதை தொடர்ச்சியாக செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

- Advertisement -