
தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக திகழக்கூடியது வெள்ளிக்கிழமை. அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட விசேஷம் மிகுந்த ஆடி வெள்ளியன்று நாம் சில பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைப்பதன் மூலம் நம்முடைய வாழ்வில் மகாலட்சுமி தாயாரின் அருளும் அம்பாளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். அந்த பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மங்கள காரகனாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அருள் ஒருவருக்கு இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் திருமண பாக்கியமோ, குழந்தை பாக்கியமோ ஏற்படும். அதே சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினையற்ற நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். அதனால் வெள்ளிக்கிழமை அன்று மங்கள காரகனான செவ்வாய் பகவானுக்குரிய பொருட்களை வாங்குவது என்பது மிகவும் சிறப்பு.
அந்த வகையில் முதலிடத்தை பிடிப்பது பருப்பு வகைகள். பருப்பு வகைகளில் ஏதாவது ஒரு பருப்பை நாம் வெள்ளிக்கிழமை அன்று வாங்குவதன் மூலம் மங்களகரமான வாழ்க்கை அமையப்பெறும் என்று கூறப்படுகிறது. அதே போல் இந்த ஆடி மாதத்தில் நம்முடைய வீட்டு பூஜை அறையில் திருமாங்கல்ய சரடு என்பது குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டும்.
மேலும் வெற்றிலை பாக்கும் நிறைவாக இருக்க வேண்டும். எந்த ஒரு சுமங்கலி பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்றால் அவர்களுக்கு இந்த மாங்கல்ய சரடையும் வெற்றிலை பாக்கையும் இதோடு சேர்த்து ஏதாவது ஒரு இனிப்பு வகையையும் நாம் தரவேண்டும். இப்படி தருவதன் மூலமும் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். எதிரியே நம் வீட்டிற்கு வந்தாலும் நாம் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அடுத்ததாக இந்த ஆடி மாதத்தில் நாம் வாங்க வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு பொருள் என்னவென்றால் அதுதான் சுக்கிரனின் அம்சம் பொருந்திய வெள்ளி பொருட்கள். அதிலும் குறிப்பாக மீன் குறியீடு இருக்கக்கூடிய வெள்ளி சாவிக்கொத்தை வாங்கி அதில் பணத்தையும் நகையையும் வைத்திருக்கக் கூடிய பெட்டகத்தின் சாவியை கோர்த்து பெண்கள் தங்களுடைய இடுப்பில் வைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும்.
இதோடு மட்டுமல்லாமல் சங்கு சக்கர நாமத்தை வெள்ளியில் வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் வெள்ளி நாணயத்தில் ஸ்ரீ சக்கரம் இருப்பது போல் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கில் போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் பல அற்புதமான பலனை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:ஆசைகள் நிறைவேற வியாழக்கிழமை பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பொருட்களில் தங்களால் இயன்ற பொருட்களை இந்த ஆடி மாதம் நிறைவடைவதற்குள்ளோ அல்லது வெள்ளிக்கிழமை அன்றோ வாங்கி வந்து வீட்டில் வைப்பதன் மூலம் செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்