
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் உடன் பிறந்தவர்கள், நம்முடைய பெற்றோர்கள், நண்பர்கள் என்று பல உறவுகள் நம்மை சூழ்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று ஏதாவது ஒன்றை கொடு நான் அப்புறம் தருகிறேன் என்று வாங்குவார்கள். நாமும் நம் உறவினர் தானே என்ற எண்ணத்தில் கொடுத்து விடுவோம். திரும்பவும் வாங்க மாட்டோம். அந்த மாதிரி நாம் கொடுக்கக்கூடிய பொருட்களில் சில பொருட்கள் நமக்கு கஷ்டத்தை தருவதோடு மட்டுமல்லாமல் நம்மிடமிருந்து வாங்கிச் சென்றவர்களுக்கும் கஷ்டத்தை தரக்கூடிய பொருட்களாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அன்றைய காலத்தில் திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய பெற்றோர் வீட்டிற்கு வருவார்கள். அப்படி வந்து விட்டு திரும்பும் பொழுது சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பலரும் இன்றளவும் அதை முறையாக பின்பற்றி வந்தாலும் சிலர் இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்று கூறிவிட்டு என்னென்ன தோணுகிறதோ அவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்வார்கள். இது திருமணமான பெண்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியது ஒன்று அல்ல.
உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் என்று அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். ஒரு பொருளை நாம் பிறரிடம் இருந்து வாங்குகிறோம் என்றால் அதனால் நமக்கு நன்மைகள் உண்டாக வேண்டும். அதை அவர்கள் நமக்கு தருவதன் மூலம் அவர்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும். ஆனால் இந்த பொருட்களை யார் கொடுத்தாலும் அவர்களுக்கும் கஷ்டம் தான் யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கும் கஷ்டம் தான். அப்படிப்பட்ட பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலாவது ஆக இருக்கக்கூடியது இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள். இரும்பு என்பது சனிபகவானுக்குரிய உலோகமாக திகழ்கிறது. இரும்பு சம்பந்தப்பட்ட ஒரு சிறிய ஆணியாக இருந்தாலும் அதை யாருக்கும் இலவசமாக தரக்கூடாது என்று கூறப்படுகிறது. அதே சமயம் இலவசமாக வாங்க கூடாது என்றும் கூறப்படுகிறது. நம்மிடம் இருக்கக்கூடிய சனிபகவானை பிறருக்கு நாம் கொடுத்துவிட்டால் நமக்கு சனி தோஷம் நீங்கிவிடும் என்று பலரும் நினைப்பார்கள். அது முற்றிலும் தவறு. நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக் கூடியவராக தான் சனி பகவான் திகழ்கிறார்.
அவரை நாம் பிறருக்கு தானமாக தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் குறையாமல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதோடு மட்டுமல்லாமல் வாங்கக்கூடிய நபர்களுக்கும் கர்ம வினைகள் என்பது அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் இரும்பு தொடர்பான எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருளை யாருக்கும் இலவசமாக தராதீர்கள். யாரிடமிருந்தும் இலவசமாக வாங்காதீர்கள். ஒரு ஆணியாக இருந்தாலும் அதை அவசியத்திற்காக வாங்கினாலும் ஒரு ரூபாயாவது கொடுத்துவிட்டு வாங்க வேண்டும்.
அடுத்ததாக கூறப்படுவது கூர்மையான ஆயுதங்கள். சாதாரண ஒரு குண்டு ஊசி அல்லது சேஃப்டி பின் போன்றவற்றை கூட நாம் யாருக்கும் இலவசமாக நம்முடைய கைகளால் கொடுக்கக் கூடாது. பிறரும் அதை இலவசமாக அவர்களுடைய கைகளால் வாங்கக்கூடாது. அதையும் மீறி சேஃப்டி பின் இருக்கிறதா கொடு என்று அவசரத்துக்கு கேட்கும் பொழுது அதை கையில் தராமல் ஒரு தரையில் வைத்து விட்டு சென்று விட வேண்டும். சென்ற பிறகுதான் அவர் அதை எடுக்க வேண்டும்.
அடுத்ததாக கசப்பான பொருட்கள். கசப்பான பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை யாருக்கும் நாம் இலவசமாக தரக்கூடாது. வீட்டில் பாகற்காய் காய்த்து இருக்கிறது. சுண்டைக்காய் செடி இருக்கிறது. அதிக அளவில் காய்த்திருக்கிறது. நீங்கள் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று யாருக்கும் தரக்கூடாது.
அதையும் மீறி தருவதாக இருந்தால் ஒரு ரூபாயாவது வாங்கிக் கொண்டு தான் தர வேண்டும். பணத்தை வாங்காமல் இலவசமாக கொடுத்தோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் இடையே இருக்கக்கூடிய உறவானது கசந்து போய்விடும். அதாவது சண்டைகள் ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை
சாதாரண பொருட்கள் தானே என்று நாம் கொடுக்கக்கூடிய பொருட்களின் பல சூட்சுமங்கள் நிறைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்பவர்கள் இதை முழு நம்பிக்கையுடன் பின்பற்றி நலமுடன் வாழ வேண்டும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.