- Advertisement -
- Advertisement -

ஒருவர் நல்லபடியாக வளர்ந்து வந்தாலே ஊரார் கண்ணுக்கும், உற்றார் கண்ணுக்கும் பொறுக்காமல் போய்விடும். அடுத்தவர்களின் கண்பார்வை நமக்கு திருஷ்டியாக மாறும் பொழுது உடல்நல பிரச்சனைகளும், துன்பங்களும் வரக்கூடும் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில பொருட்களை வைத்து திருஷ்டி கழித்து சுற்றி போடுவார்கள். அதில் முதலிடம் பிடித்துள்ளது எலுமிச்சை பழம்! தேவ கனியாக இருக்கும் எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி கழிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

எலுமிச்சை கனியை தேவகனி என்பார்கள். ஒரு எலுமிச்சை வீட்டில் இருந்தால் போதும் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளையும் விரட்டி விடலாம். அதே எலுமிச்சை பழத்தை வைத்து எப்பேர்ப்பட்ட துஷ்ட சக்திகளையும் நம் வசம் ஈர்த்தும் விடலாம். எலுமிச்சைக்கு அனைத்தையும் கிரகிக்கும் தன்மை உள்ளது. நல்லவைகளையும் அது கிரகித்து ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்ளும். கெட்ட விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளக் கூடியது என்பதால் இதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

- Advertisement -

புள்ளிகள் அற்ற சுத்தமான பசுமையான எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். திருஷ்டி கழிக்கும் பொழுது எலுமிச்சை பழம் பச்சையாக காய்த்து இருக்கக் கூடாது. முழுமையாக மஞ்சள் நிறத்துடன் பழுத்து இருக்க வேண்டும். அதுவே திருஷ்டி சுற்ற உகந்த கனியாகும். இந்த கனியை கையில் வைத்துக் கொண்டு கைகளாலேயே இரண்டாகப் பிளக்க முயற்சி செய்யுங்கள். அப்படி முடியாத பட்சத்தில் கத்தியை பயன்படுத்தி இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

இரண்டாக வெட்டிய எலுமிச்சை பழத்தில் சிறிதளவு குங்குமத்தை தடவிக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை நிலை வாசலில் வைக்கும் பொழுது மஞ்சள் தடவி அதன் மீது குங்குமம் தடவ வேண்டும். ஆனால் திருஷ்டி கழிக்கும் பொழுது மஞ்சள் தடவக் கூடாது. குங்குமம் மட்டும் தடவி, ஒரு கற்பூரத்தை நடுவில் வைத்து பற்ற வைத்து, திருஷ்டி கழிக்க வேண்டிய நபரை கிழக்கு பார்த்தபடி அமர செய்ய வேண்டும். அந்தி சாய்ந்த பிறகு, சூரியன் மறைந்த பிறகு தான் எலுமிச்சை திருஷ்டி கழிக்க வேண்டும். வலது புறம் முதல் மூன்று முறையும், பின் இடது புறம் மூன்று முறையில் சுற்றி விட்டு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மூன்று முறை கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே திருஷ்டியை கழிக்க வேண்டும்.

- Advertisement -

திருஷ்டி சுத்தும் போது சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம் :

பாம்பு கண்ணு பல்லி கண்ணு பல்லியோட போ..
பேய் கண்ணு பிசாசு கண்ணு பேயோட போ..
பிச்ச கண்ணு திரிச்ச கண்ணு தீயோட போ..
மஞ்சள் வர்ண புளித்த மாரி,
ரத்த வீரராசா கன்னி,
மனம் கொண்ட பூமி நிஷ்ட மாரி வா வா..

இதையும் படிக்கலாமே:
தைப்பூசம் 6 ரூபாய் பரிகாரம்

மந்திரத்தை சொல்லி திருஷ்டி கழித்த பின்பு நீங்கள் வீட்டு வாசலை தாண்டி வெளியில் சென்று கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தில் இருக்கக்கூடிய கற்பூரத்தை கீழே போட்டுவிட்டு, எலுமிச்சையை இரண்டாகப் பிரித்து வலது கையில் இருக்கும் எலுமிச்சையை இடது புறமும், இடது கையில் இருக்கும் எலுமிச்சையை வலது புறமும் நசுக்கி தூக்கி போட வேண்டும். அவ்வளவுதான் இப்படி செய்யும் பொழுது எப்பேர்பட்ட பொல்லாத கண் திருஷ்டியும் எளிதாக அந்த நபரை விட்டு அகன்று விடும். இதனால் அவருக்கு வரக்கூடிய ஆபத்துகள் தடுக்கப்பட்டு, அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மேலான வளர்ச்சியுடனும் வெற்றியை அடைவார்கள் என்பது நம் முன்னோர் நம்பிக்கை.

- Advertisement -