
மூலிகைகளின் மகத்துவம் பலரும் அறிந்திராத ஒன்றாக தான் இருக்கிறது. நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகை பொருட்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மூலிகைகளை நம்முடைய முகத்திற்கும், தலைக்கும் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் நம்முடைய முகத்திற்கும், தலைக்கும் கிடைக்கும் என்பதை பலரும் உணர்வதில்லை. அந்த வகையில் இன்று துளசி இலையை வைத்து எப்படி அழகை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
துளசி செடியிலிருந்து ஆக்சிஜன் அதிகளவு கிடைக்கும் என்பதால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் கண்டிப்பான முறையில் துளசி செடியை வளர்க்க வேண்டும் என்று கூறினார்கள். இதே துளசி செடியில் இருந்து தினமும் ஒவ்வொரு இலை என்ற வீதம் சாப்பிட்டு வர உடலின் இருக்கக்கூடிய சளிகள் அனைத்தும் நீங்கும். நுரையீரல் சுத்தமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த துளசி இலையை தெய்வீக வழிபாட்டிற்கும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு அற்புதம் நிறைந்த துளசி செடியை நம்முடைய அழகிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எண்ணெய் பசை நீங்க: ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அந்த விழுதில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது நன்றாக காய்ந்த பிறகு ஈர துணியை வைத்து முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் பன்னீரை தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.
பருக்கள் நீங்க: 20 துளசி இலைகளை எடுத்து அதை நன்றாக அரைத்து அதனுடன் தயிரை கலந்து முகத்தில் தடவி உலர விட்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள் நீங்கும். மேலும் பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் நீங்கிவிடும்.
வறண்ட சருமம் நீங்க: ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு சிட்டிகை துளசி இலை பொடியை சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பிறகு குளிந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வறண்ட சருமம் நீங்கி சருமம் என்றும் ஈரப் பதத்துடன் இருக்கும்.
முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க: 20 துளசி இலைகளை நன்றாக அரைத்து அதனுடன் பாதி அளவு எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்துளைகளில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் படிக்கலாமே: இளமையான தோற்றத்தில் பெரும் நெல்லிக்காய் ஃபேஸ் பேக்
இந்த அனைத்து வகையான பேக்குகளையும் வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் பயன்படுத்தினாலே போதும். நம் முகத்தில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.