
துணி துவைப்பதே ஒரு பெரிய டென்ஷனான வேலை தான். அதிலும் சாயம் போகும் துணி, போகாத துணி என்று தனித் தனியாக பிரித்துப் பார்த்து துவைப்பதில் இன்னும் கொஞ்சம் டென்ஷன் ஆகத் தான் செய்யும். இனி அந்த டென்ஷனே உங்களுக்கு தேவை இல்லை. இனி சாயம் போகும் துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் இதை மட்டும் கலந்து விடுங்கள். துணிகளில் சாயம் போகவே போகாது.
துணிகளின் சாயம் போகாமல் இருக்க:
ஒரு சில துணிகள் வாங்கும் போது பளிச்சென்ற நிறத்துடன் பார்க்கும் போதே கண்ணை கவரும் வண்ணம் இருக்கும். ஆனால் ஒரு முறை துவைத்த உடனே அதில் இருக்கும் நிறம் போய் பழைய துணி போல வெளுத்து விடும். அப்படி சாயம் போகும் துணிகளை எல்லாம் இந்த முறையில் துவைத்தால் சாயம் போகவே போகாது.
இதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டீஸ்பூன் உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு தூள் உப்பு, கல் உப்பு என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். இத்துடன் ஒரு டீஸ்பூன் படிகார தூளையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சாயம் போகக் கூடிய துணியை ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த துணியை எப்போதும் போல துவைத்து விடலாம். கொஞ்சம் கூட துணியில் சாயம் போகவே போகாது.
அதே போல் துணிகளில் படிந்து இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்குவது மிகவும் சிரமமான காரியம் தான். அதிலும் ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்தும் போது அதன் கறை பட்டு விட்டால் போகவே போகாது. அதற்கும் ஒரு எளிமையான வழி உள்ளது.
இது போன்று கறை படிந்த துணிகளின் கறை உள்ள இடத்தில் கொஞ்சமாக பால் பவுடர் அல்லது பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தட்டில் தண்ணீர் வைத்துக் கொண்டு அந்த துணியை தண்ணீரில் அப்படியே வைத்து விடுங்கள். பத்து நிமிடம் அப்படியே இருக்கட்டும் அதன் பிறகு கைகளில் லேசாக கசக்கி விட்டால் போதும் கறைகள் மறைந்து விடும்.
இந்த கறை மறந்து விட்டாலும் கறை படிந்த இடம் அப்படியே தெரியும். அதற்கு கறை படிந்து துணியை பால் பவுடர் வைத்து தேய்த்த பிறகு ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை படிந்த இடத்தில் கொஞ்சமாக பேஸ்ட்டை தேய்த்து பிரஷ் வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். இப்படி செய்யும் பொழுது துணியின் இரண்டு புறமும் தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை கொண்டு துணியை அலசி விடுங்கள். இதன் பிறகு கறை பட்ட இடத்தை நீங்கள் தேடினாலும் கிடைக்காது.
இது போன்று கறை படிந்த துணிகளை எளிமையாக சுத்தம் செய்யவும், சாயம் போகும் துணிகளை சாயம் போகாமல் துவைக்கவும் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.