- Advertisement -
- Advertisement -

விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய ஒரு நட்சத்திரம். முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பதால், இந்த நட்சத்திரத்தில் முருகன் அவதரித்தது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடுவது, தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு அளித்து, குடும்ப பிரச்சனைகளை நீக்கி, செல்வ செழிப்பையும், மன அமைதியையும் தரும் என்று நம்பப்படுகிறது. வைகாசி விசாகம் அன்று எப்படி முருகனை வழிபடுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் போன்ற அசுரர்களின் கொடூரச் செயல்களில் இருந்து தேவர்களையும், உலக உயிர்களையும் காக்க முருகப்பெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றி, பின்னர் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருவாகி, இறுதியில் பார்வதி தேவியால் ஒருமுகப்படுத்தப்பட்டு, ஆறுமுகப் பெருமானாக அவதரித்த நாளே வைகாசி விசாகம். இது தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஒரு முக்கிய நம்பிக்கை. மொத்தத்தில், வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமானின் அவதாரத்தையும், தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும் கொண்டாடும் ஒரு புனிதமான நாளாகும்.

வைகாசி விசாக வழிபாடு முறை:
வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் (பிரம்ம முகூர்த்த வேளை – காலை 4.30 – 6 மணிக்குள்) எழுந்து நீராட வேண்டும். வீட்டில் உள்ள பூஜை அறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து, ஐந்து முக விளக்கேற்றி, ஐந்து வித எண்ணெய்களை ஊற்றி, ஐந்து வித மலர்களால் அலங்கரிக்க வேண்டும். முருகனுக்குப் பிடித்தமான அப்பம் (கந்தரப்பம்), மாம்பழம் மற்றும் பிற இனிப்புகளை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

- Advertisement -

விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு, முருகப் பெருமானை வணங்கத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம் அல்லது பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். விரதம் இருக்கும் போது “ஓம் சரவண பவ”, “ஓம் சரவணபவாய நம”, “ஓம் முருகா” போன்ற முருகனுக்குரிய மந்திரங்களை நாள் முழுவதும் ஜெபித்து வரலாம்.

கந்த சஷ்டி கவசம், சுப்ரமணிய புஜங்கம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற முருகனுக்குரிய பாடல்களை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்யலாம். வீட்டில் பூஜை செய்த பிறகு, அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசிப்பது மிகவும் சிறப்பு. கோயிலில் முருகனுக்கு விளக்கேற்றி வழிபடலாம். முருகனுக்கு நல்லெண்ணெய், பசும்பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், சர்க்கரை, இளநீர், எலுமிச்சம்பழம், மாம்பழம், திருநீர், அன்னம், சந்தனம், பன்னீர், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

இதையும் படிக்கலாமே:
பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய சிவன் ஸ்லோகம்

பால்குடம், காவடி எடுத்தும் முருகனை வழிபடலாம். இந்த நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்வது குலம் தழைக்க உதவும் என்பது நம்பிக்கை. ஏழை எளியோருக்கு இனிப்புகள், உணவுப் பொருட்களை தானமாக வழங்கலாம். முருகனை வணங்கும்போது அவரது அடியார்களையும் போற்றி வணங்க வேண்டும். மனதார முருகனை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். வைகாசி விசாகம் அன்று முருகனின் ஆறு முகங்களையும் தியானிப்பது சிறந்தது. ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட பண்பைக் குறிக்கும். இந்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வைகாசி விசாகத்தன்று முருகனை வழிபட்டு அவரது அருளைப் பெறலாம்.

- Advertisement -