
நேற்று சூரசம்காரம் திருச்செந்தூரிலும், மற்ற புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களிலும் சிறப்பாக நிறைவடைந்தது. திருச்செந்தூரில் ஜெயந்திநாதர், அசுரரை வதம் செய்து பக்தர்களுக்கு காட்சி தந்து, பக்தர்களிடத்தில் இருக்கும் கஷ்டங்களையும் வதம் செய்து விட்டார். இன்றைய தினம் விரதம் இருந்த முருக பக்தர்கள் அனைவரும், முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு, தங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
உங்களுடைய வீட்டின் அருகில் எந்த முருகப் பெருமான் திருக்கோவில் இருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தை பார்த்து அந்த திருக்கல்யாணத்திற்கு உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை வாங்கி கொடுத்து, வழிபாட்டினை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
விரதம் முடித்து முதல் முதலில் உணவு எடுப்பது என்பது காரசாரமான உணவை எடுக்கக் கூடாது. முதலில் தண்ணீர் குடிக்கலாம், பழச்சாறு குடிக்கலாம், வயிற்றுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீராகாரங்களை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறப்பான பச்சடி தயார் செய்து சாப்பிடுவது நல்லது. இதை வாழைத்தண்டு விரதம் என்று சொல்லுவார்கள். 6 நாட்கள் விரதம் இருந்து உங்களுடைய உடம்பில் உஷ்ணம் அதிகரித்திருக்கும். அதை தணிப்பதற்கு ஒரு வாழைத்தண்டு பச்சடி எப்படி தயாரிப்பது என்று தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒரு 1/2 ஸ்பூன் உளுந்தை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். அது 1/2 மணி நேரம் ஊறட்டும். அந்த உளுந்து கருப்பு உளுந்தாக இருந்தால் சிறப்பு. கொஞ்சம் பசுந்தயிர் எடுத்துக்கோங்க. சரியான அளவு புளித்த தயாராக இருக்க வேண்டும். ரொம்பவும் பழைய தயிரை பயன்படுத்தக் கூடாது. அந்த தயிரில் நறுக்கிய பழ வகைகளை எல்லாம் சேர்க்கலாம். மாதுளம் பழம், வாழைப்பழம், ஆப்பிள் பழம் உங்களால் எந்த பழம் சேர்க்க முடியுமோ சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் ஒரு சின்ன துண்டு வாழைத்தண்டை எடுத்து பொடியாக நறுக்கி சேர்த்து சிறிதளவு, உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
தயிரில் பழ வகைகள் வாழைத்தண்டு, பிறகு ஊற வைத்திருக்கும் உளுந்தை சேர்த்து கலந்து முதல் உணவாக எடுத்துக் கொண்டால் உடல் உஷ்ணமானது தணிந்து, உணவை உட்கொண்ட பிறகு உங்களுடைய வயிற்றுக்கு எந்த உபாதைகளும் ஏற்படாமல் இருக்கும். அதே போல அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு காரமான உணவு எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தயிர் சாதம், பருப்பு சாதம் போன்ற காரம் இல்லாத சீக்கிரம் ஜீரணமாக கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் முருகப் பெருமானை வேண்டி நீங்கள் எதற்காக விரதம் இருந்திர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் நிறைவேறும். அதே போல இந்த வருடம் முருகனை வேண்டி விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து, சூழ்நிலையின் காரணமாக சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்களுக்கும் அடுத்த வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கக்கூடிய வாய்ப்பு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று அந்த முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்வோம்.
இதையும் படிக்கலாமே: சுபகாரிய தடை நீக்கும் தீபம்
அசுரர்களை அழித்து, தேவர்களை காத்த முருகப்பெருமான் இன்று சந்தோசமாக வள்ளி தெய்வயானை யோடு காட்சி தருவார். அந்த சமயத்தில் முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நிச்சயம் நிறைவேறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.