
தலைமுடி உதிரும் பிரச்சினை இன்று ஆண், பெண் என்று எந்த வித்தியாசமும் பாராமல் அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மன இறுக்கம், உணவு பழக்கவழக்கம், மாசு போன்ற பல காரணங்களால் தலைமுடி உதிர்வது வேகமாக நடக்கிறது. இந்த தலை முடி உதிரும் பிரச்சனையை தடுத்து நிறுத்தி, அலைபாயும் பளபளவென்ற கூந்தலை பெற தூக்கி போடும் வெண்டைக்காய் வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
ஆரோக்கியமான உணவு பழக்கம் தான் நல்ல தலைமுடிக்கு ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்தாலும் தலைமுடியானது வேகமாக கொட்ட துவங்கும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு உங்களுக்கு இருந்தால் முடி கொட்டுவதை தடுக்கவே முடியாது.
உதிர்ந்து கொண்டிருக்கின்ற முடியை தடுத்து நிறுத்த நீங்கள் சமையலுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய வெண்டைக்காயின் தண்டுகள் இருந்தாலே போதும். வெண்டைக்காயை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதன் தலை மற்றும் வால் பகுதியை தூக்கி எறிந்து விடுவோம். இதனை தூக்கி எறியாமல் சேகரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய பவுலில் சேகரித்த இந்த வீணாக போகின்ற வெண்டைக்காய் துண்டுகளை தண்ணீரில் ஒருமுறை அலசிவிட்டு பின்னர் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் முக்கியமான மூன்று பொருட்களை நாம் சேர்க்கப் போகிறோம். முதலில் தலைமுடிக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கருஞ்சீரகத்தை அரை ஸ்பூன் அளவிற்கு போட வேண்டும். இது தலைமுடியை நரையிலிருந்து பாதுகாக்கும்.
அடுத்ததாக வெந்தயத்தை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். வெந்தயம் உச்சந்தலை உஷ்ணத்தை குறைத்து, தலைமுடிக்கு நல்ல ஒரு ரத்த ஓட்டத்தை கொடுக்கும். குளிர்ச்சியை கொடுத்து தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தும், மேலும் தலைமுடி கரடு முரடாக இருந்தால் அதை மென்மையாக்கி அலைபாய செய்யும் அற்புதமான ஒரு பொருள். பின்னர் கடைசியாக இவற்றுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய அரிசி சேர்க்க வேண்டும். சாதாரணமாகவே அரிசி ஊற வைத்த தண்ணீரை கொண்டு தலை முடியை அலசினால் தலை முடி உதிர்வது தடுக்கப்படும், மேலும் நல்ல சத்து கிடைத்து வேர்க்கால்கள் வலுபெறும். இதனால் முடி ஆனது வேகமாகவும் வளர செய்யும்.
இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் நீங்க நவராத்திரி அம்மன் வழிபாடு
வெண்டைக்காய் துண்டுகளுடன் இந்த மூன்று பொருட்களையும் மேற்கூறிய அளவின்படி சேர்த்து அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அப்படியே மூடி போட்டு விடுங்கள். இரவு முழுவதும் இதனை ஊறவிட்டு விடவேண்டும். காலையில் எழுந்து பார்த்தால் நன்கு நுரை தள்ள இந்த பொருட்களில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி விடும். அதன் பிறகு ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வெண்டைக்காய், வெந்தயம் ஆகியவற்றின் சாறு இருப்பதால் கொழகொழவென்று பிசுபிசுப்பு தன்மை உடன் இருக்கும். இதனை தலைமுடியில் உச்சியிலிருந்து நுனிவரை எல்லா இடங்களிலும் நன்கு படும்படி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலைக்கு சாதாரணமாக நீங்கள் ஷாம்புவை தண்ணீரில் கலந்து முடியை அலசுங்கள். வாரம் ஒரு முறை இதை பின்பற்றினால் போதும், தலை முடி உதிர்வது கட்டுப்பட்டு நன்கு கருகருன்னு பளபளப்பாக நீண்டு முடி வளரும்.