
வெயில் காலம் ஆரம்பித்தாலே, அனைவர் வீட்டிலும் ஊறுகாய் போடுவது, வற்றல் போடுவது, வடகம் போடுவது என்று வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்வார்கள். அவ்வாறு செய்வதில் வற்றல் மிக மிக முக்கியமானது. வற்றலில் நாம் கொத்தவரங்காய் வற்றல், மிளகாய் வற்றல், மிதுக்கு வற்றல் என்று பல வகைகளில் வற்றல் போடுவோம். ஆனால் இப்பொழுது நாம் இங்கு பார்க்க இருக்கும் வற்றல் என்னவென்றால் வெண்டைக்காய் வற்றல் தான். வெண்டைக்காய் வற்றலை போட்டு வைத்து, நாம் நினைக்கும் போது பொறித்து சாப்பிடலாம். வெண்டைக்காய் பிடிக்காத குழந்தைகளும் இந்த வற்றலை விரும்பி சாப்பிடுவர்.
வெண்டைக்காய் – 1/4 கிலோ, தயிர் – 1/2 கப், மிளகாய் தூள் – தேவை யான அளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு
முதலில் நாம் வெண்டைக்காயை கழுவி நன்றாக தண்ணீர் இல்லாமல் துடைத்துவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு அந்த வெண்டைக்காயில் இருக்கும் வழவழப்பு தன்மை போகும் அளவுக்கு வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதில் எண்ணெய், தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி நன்றாக கிளறி ஓர் இரவு முழுவதும் அப்படியே ஊறவிட வேண்டும்.
பிறகு ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரோ அல்லது தட்டிலோ இந்த வெண்டைக்காயை கொட்டி, நன்றாக உலர விட வேண்டும். வற்றல் போல இவை வெயிலில் நன்கு காய வேண்டும்(எப்படியும் குறைந்தது 3 நாட்கள் காய வேண்டும்). காய்ந்த பிறகு அவற்றை டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது அதை எடுத்து கொஞ்சம் பொறித்து கொள்ளலாம். இதைப் போலவே நாம் பாகற்காயிலும் வற்றல் தயார் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: ராகி மாவோட இதையும் சேர்த்து அரைச்சு பாருங்க நல்லா சாப்டான பன் போல ஊத்தப்பம் ரெடி பண்ணலாம்.
வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. வெண்டைக்காயை சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இவ்வாறு வற்றலாக செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவர். இதை நாம் மாலை சிற்றுண்டி ஆகவும் குழந்தைகளுக்கு தரலாம். வெண்டைக்காய் மலிவாக கிடைக்கும் காலத்தில் இவ்வாறு செய்து வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.