
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அவர் செய்கின்ற வேலையில் சிறந்து விளங்க வேண்டும் அல்லது அவர் செய்கின்ற தொழிலில் சிறந்து விளங்க வேண்டும். எத்தனையோ நபர்கள் தங்களுக்கு திறமை இருந்தும் அந்த திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள், தற்காலிகமாக இருக்கக்கூடிய வேலை நிரந்தரமாகாமல் வருத்தப்படுவார்கள், தொழிலில் நல்ல அனுபவம் இருந்தும் முயற்சிகள் செய்தும் ஒரு வெற்றியை கூட அடைய முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை எப்படி வழிபட்டால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
உக்கிர தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் நரசிம்மர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தன்னுடைய உண்மையான பக்தன் அழைத்த அழைப்பிற்காக ஓடோடி வந்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட நரசிம்மரை பலரும் கடன் பிரச்சினை தீர வேண்டும், எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்றுதான் வழிபாடு செய்வார்கள். நரசிம்மரிடம் நாம் எந்தவித வழிபாட்டை செய்தாலும் முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் செய்தோம் என்றால் அந்த வழிபாட்டிற்குரிய பலன் உடனே கிடைக்கும் என்று கூறலாம். அந்த வகையில் நாம் செய்கின்ற வேலை மற்றும் தொழிலில் வெற்றிகள் உண்டாக நரசிம்மரை வழிபாடு செய்யும் முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
பெருமாளின் அவதாரங்களில் ஒருவராக தான் நரசிம்மர் திகழ்கிறார். பெருமாளுக்கு உரிய கிழமைகளாக புதன்கிழமையும் சனிக்கிழமையும் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக அதிக அளவு பெருமாள் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு உகந்த கிழமையாக சனிக்கிழமை திகழ்கிறது. அந்த சனிக்கிழமையில் தான் நாம் நரசிம்மரையும் வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சனி ஹோரை வரும். அந்த நேரத்தில் நாம் அருகில் இருக்கக்கூடிய நரசிம்மர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பெருமாள் ஆலயத்தில் நரசிம்மர் இருந்தாலும் அங்கு சென்று இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.
ஆலயத்திற்கு செல்லும் பொழுது நவதானியம் ஒரு பாக்கெட் வாங்கிக்கொண்டு செல்லுங்கள். நரசிம்மருக்கு முன்பாக 11 அகல் விளக்குகளை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் இந்த நவதானியத்தை கையில் வைத்துக் கொண்டே தீபத்தை ஏற்று முடித்த பிறகு மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். மூலவரை தரிசனம் செய்துவிட்டு உப தெய்வங்களை தரிசனம் செய்யும் பொழுது கையில் இருக்கக்கூடிய நவதானியங்களை மண்பாங்கான இடத்தில் தூவிக்கொண்டே தரிசனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்தை மூன்று முறை வலம் வரும் பொழுதும் இந்த நவதானியங்களை நாம் தூவி விடலாம்.
மூன்று முறை வலம் வந்த பிறகு கொடி மரத்திடம் சஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அங்கேயே அமர்ந்து “ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி நரசிம்மரே நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூட வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி இதே மந்திரத்தை 51 முறை எழுத வேண்டும். எழுதி முடித்த பிறகு இதனுடன் நம்மால் இயன்ற அளவு காணிக்கையை வைத்து சிறிது பச்சை கற்பூரத்தையும் அதனுடன் வைத்து அதை அப்படியே மடித்து அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் போட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 9 வாரங்கள் நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டத்தை நீக்கும் ஏகாதசி தீபம்
எவ்வளவு முயற்சிகள் செய்தும் வேலை நிரந்தரமாகவில்லை, வேலையில் நல்ல முன்னேற்றம் இல்லை என்பவர்களும், தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லை என்பவர்களும் நரசிம்மரை இப்படி முழுமனதோடு வழிபாடு செய்ய அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்கிறோம்.