- Advertisement -
- Advertisement -

விநாயகர் சதுர்த்தி என்பது ஞானத்தையும், செழிப்பையும், வெற்றிகளையும் அருளும் விநாயகப் பெருமானைக் உலகமெங்கும் இருக்கும் பக்தர்களால் கொண்டாடும் ஒரு அற்புதமான திருவிழா. இந்த விழா கொண்டாடப்படுவதன் பின்னணியில் பல புராணக் கதைகள் இருந்தாலும், மிகவும் பிரபலமான கதை என்ன? விநாயகர் சதுர்த்தி ஏன் இவ்வளவு விமர்சையாக கொண்டாடப்படுகிறது? நமக்கு பிடித்த பிள்ளையார் பிறந்தநாள் அன்று என்ன நிகழ்ந்தது? என்னும் ஆன்மீகம் சார்ந்த கதையை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒருமுறை, சிவபெருமானின் மனைவி பார்வதி தேவி கயிலாயத்தில் நீராடச் சென்றார். அப்போது, யாரும் உள்ளே வரக்கூடாது என்று நினைத்தார். தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு காவலன் தேவை என்று உணர்ந்த அவர், தனது உடலில் இருந்த அழுக்கைக் கொண்டு, ஒரு அழகான ஆண் உருவத்தை உருவாக்கினார். அந்த உருவத்திற்கு உயிர் கொடுத்து, அதை தன் மகன் போல பாவித்தார். அந்த பிள்ளையிடம், “நான் குளித்து முடிக்கும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்காதே” என்று கூறி, வாசலில் காவலுக்கு அமர்த்தினார்.

- Advertisement -

சிறிது நேரம் கழித்து, சிவபெருமான் அங்கு வந்தார். வாசலில் நின்றிருந்த பிள்ளையார், “உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்று தடுத்தார். கோபமடைந்த சிவபெருமான், “நான் இவள் கணவன், எனக்கு உள்ளே செல்ல அனுமதி உண்டா” என்று கேட்டார். ஆனால், விநாயகர் தனது தாயின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, “யாராக இருந்தாலும் அனுமதி இல்லை” என்று உறுதியாகக் கூறினார். இருவருக்கும் இடையே கடும் போர் மூண்டது. இறுதியில், கோபத்தின் உச்சியில் இருந்த சிவபெருமான், தனது திரிசூலத்தால் விநாயகரின் தலையைத் துண்டித்தார்.

போர் முடிந்து, உள்ளே வந்த பார்வதி தேவி, தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்டு மிகவும் மனம் நொந்து அழுதார். அவளது கோபம், பிரபஞ்சத்தையே நடுங்கச் செய்தது. மகனின் உயிரை மீட்டுத் தருமாறு சிவபெருமானிடம் கதறினார். பார்வதியின் துயரத்தைக் கண்ட சிவபெருமான், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தார். உடனடியாக தன் பூத கணங்களை அழைத்து, “யானையின் தலையைக் கொண்டு வாருங்கள், அதுவும் வடதிசையில் தலைவைத்து படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

- Advertisement -

பூத கணங்களும் அவ்வாறே ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். சிவபெருமான் அந்த யானையின் தலையை விநாயகரின் உடலில் பொருத்தி, அவருக்கு மீண்டும் உயிரளித்தார். அப்போது, தேவர்கள் அனைவரும் விநாயகரை வணங்கி, “விநாயகரே, நீங்கள் தான் அனைத்து தடைகளையும் நீக்கும் முழுமுதற் கடவுள். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன், உங்களை வழிபட்ட பிறகுதான் தொடங்க வேண்டும்” என்று வாழ்த்தினர். சிவபெருமானும், “என் மகனே, இனி நீ கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவாய்” என்று கூறி, “கணபதி” எனப் பெயரிட்டார்.

இதையும் படிக்கலாமே:
விநாயகர் சிலை வாங்க நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி, விநாயகப் பெருமான் முழுமுதற் கடவுளாக அவதரித்த தினமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை வழிபட்டால், நம் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும், எந்த ஒரு புதிய காரியத்தையும் தொடங்கினால் அதில் வெற்றி கிடைக்கும் என்பது இந்துக்களின் ஆழமான நம்பிக்கை. இன்று, விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறப்பை கொண்டாடும் ஒரு திருவிழா மட்டுமல்ல; அது, நல்லதை செய்யும்போது வரும் தடைகளை தகர்த்தெறிந்து, வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் ஒரு ஆன்மீக நிகழ்வு. இது, தாய்-மகனின் புனிதமான அன்பு, கோபத்தின் விளைவு, மற்றும் பிரபஞ்சத்தின் ஒழுங்கைக் காக்கும் இறைவனின் நீதி ஆகியவற்றைக் குறிக்கிறது.

- Advertisement -