
இந்த வருடம் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி வருகின்ற புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பிள்ளையார் சிலையை வீட்டிற்கு கொண்டு வரும் போது, நல்ல நேரம் பார்த்து வாங்குவது மேலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலையை எப்போது வாங்க வேண்டும்? எந்த நல்ல நேரத்தில் வாங்க வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
பொதுவாக, விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளே (ஆகஸ்ட் 26, 2025 செவ்வாய்க்கிழமை) அல்லது சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 27, 2025 புதன்கிழமை காலையிலேயே களிமண் பிள்ளையார் சிலையை வாங்குவது நல்லது. ஒரு சிலர் முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து, பிள்ளையாரை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து விடுவார்கள். இது அவரவர்களின் குல வழக்கப்படி செய்வது உண்டு. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், களிமண் பிள்ளையாரை வாங்குவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2025 விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வாங்க நல்ல நேரம்:
ஆகஸ்ட் 26, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று சிலை வாங்க:
நல்ல நேரம்: காலை 7:45 மணி முதல் 08:45 மணி வரை.
அல்லது
10.45 மணி முதல் 11:45 மணி வரை.
ஆகஸ்ட் 27, 2025 (புதன்கிழமை) அன்று சிலை வாங்க:
நல்ல நேரம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை.
அல்லது
9:15 மணி முதல் 10:15 மணி வரை.
இந்த நேரங்களில், உங்கள் பிள்ளையார் சிலையை வீட்டிற்கு வாங்கி வந்து, பூஜைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கலாம். நீங்கள் எந்த நாளில் சிலையை வாங்கினாலும், சதுர்த்தி அன்று சரியான நேரத்தில் பூஜை செய்து விநாயகரை வழிபடுவது மிகவும் முக்கியம். பிள்ளையார் சிலையை வாங்கி வரும் பொழுது, வெறும் கையை வீசிக்கொண்டு செல்லாதீர்கள். பிள்ளையார் சிலையை வாங்க செல்லும் பொழுது மரப்பலகை ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
மஞ்சள் தடவிய மரப் பலகையில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு எடுத்துச் செல்லுங்கள். அந்த மனையில் நீங்கள் வாங்கிய பிள்ளையாரை அமர்த்தி, பிள்ளையாருக்கு சிறிய குடை ஒன்று உங்களுக்கு பிடித்தமானதாக வாங்கிக் கொண்டு, பிள்ளையாருக்கு பின்புறம் கொஞ்சம் களிமண்ணை வைத்து அதில் குடையை சொருகி வையுங்கள். பின்னர் பலகையுடன் சேர்த்து பிள்ளையாரையும் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கூட்டி வாருங்கள்.
இதையும் படிக்கலாமே:
வாழைக்காய் கோலா உருண்டை செய்முறை
பிள்ளையாரை வாங்கும் பொழுது கூடுதலாக இரண்டு குன்றிமணிகளை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். திடீரென பிள்ளையாருக்கு பூஜை செய்யும் பொழுது கண்கள் கீழே விழுந்து காணாமல் போய்விடலாம். கண்கள் இல்லாமல் பூஜை செய்வது கூடாது. எனவே கூடுதல் விதைகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. குன்றிமணி விதைகள் சிகப்பும், கருப்புமாக பார்ப்பதற்கு பளபளப்பாக அழகிய கண்கள் போல காட்சியளிக்கும். இதைத்தான் மண் பிள்ளையாருக்கு கண்களாக வைப்பது வழக்கம். அதுமட்டுமல்லாமல் கருப்பு உளுந்து கூட நீங்கள் கண்களாக செய்து வைக்கலாம். பிள்ளையார் உடைய தொந்தியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிள்ளையாரை இந்த நல்ல நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து, அவருடைய அருளை அனைவரும் பெறுக!