
காலை உணவாக எப்போதும் செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தியை விட ஏதேனும் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகளளும், வீட்டில் உள்ளவர்களும் மிகவும் விருப்பமாக்கு சாப்பிடுவார்கள். விருப்பமான உணவு என்கின்ற பொழுது கடையில் விற்கும் பீட்சா, பர்கர் போன்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை போல் அல்லாமல் கொஞ்சம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை வைத்து மிகவும் சுவையான இந்த காமாலை சுலபமாக செய்து கொடுக்கலாம். வாருங்கள் கோதுமை மாவு மற்றும் முட்டை வைத்து செய்யும் இந்த சுவையான உணவை எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், முட்டை – 3, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகு தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இருதியாக 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவு முழுவதும் நன்றாக தடவி விட்டு அதனை 20 நிமிடம் ஊற வைத்துவிட வேண்டும்.
பிறகு பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை போன்றவற்றையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தி திரட்டுவதை விட சற்று மெல்லியதாக சதுர வடிவில் திரட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் நன்றாக சூடானதும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்த மாவை தோசைக் கல்லின் மீது போட வேண்டும்.
இந்த மாவின் மீது கலந்து வைத்துள்ள முட்டையில் இருந்து ஒரு கரண்டி எடுத்து ஊற்றி பரப்பி விட வேண்டும் பிறகு 5 நிமிடம் கழித்து மாவின் நான்கு புறங்களிலும் தோசை கரண்டியைப் பயன்படுத்தி நன்றாக மடித்து விட வேண்டும். பின்னர் மாவை திருப்பி போட்டு வேக வைக்கவேண்டும். இவ்வாறு இரண்டு புறங்களும் நன்றாக சிவந்த பின்னர் தட்டிற்கு மாற்றி வைக்க வேண்டும். இதே போல மீதமுள்ள அனைத்து கலவைகளையும் செய்து எடுக்க வேண்டும்.