
ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்பது ரொம்பவும் பரிசுத்தமானதாக இருக்கும். கடவுள் பக்தி இல்லாதவர்கள் கூட பூஜை அறையை அவ்வளவு தூய்மையாகவும், வாசம் மிகுந்ததாகவும் வைத்திருப்பார்கள். பூஜை அறையில் இது போன்ற சிறு சிறு குறிப்புகளை தெரிந்து பின்பற்றி வந்தாலே தெய்வ அருளும், லட்சுமி கடாட்சமும் நம் வீட்டில் அதிகரிக்க துவங்கும். அப்படியான அட்டகாசமான 10 புதிய பூஜை அறை குறிப்புகளை பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.
குறிப்பு 1:
பூஜை அறையில் படங்களுக்கு வைக்கும் சந்தன, குங்குமம் பொட்டுகள் அடிக்கடி விழுந்து விடுகிறது என்றால், நீங்கள் சந்தனத்துடன் பன்னீர், ஜவ்வாது ஆகியவற்றை கலந்து குழைத்து பொட்டு வைத்து, பின் குங்குமம் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அப்படியே வாசனையுடன் இருக்கும், கீழே விழுகாது. அந்த தெய்வீக வாசம் மகாலட்சுமி அருளும் பெற்றுத் தரும்.
குறிப்பு 2:
பூஜைக்கு வாங்கிய வெற்றிலை வாடாமல் அப்படியே இருக்க ஒரு பித்தளை டம்ளர் அல்லது சொம்புக்குள் வெற்றிலைகளை வைத்து கவிழ்த்து வையுங்கள்.
குறிப்பு 3:
பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை பூச்சி அரித்து விடாமல் பாதுகாக்க துடைக்கும் பொழுது தண்ணீருடன் கொஞ்சம் கற்பூரத்தை நுணுக்கி சேர்த்து கலந்து சுத்தமான துணியால் துடைத்து வாருங்கள்.
குறிப்பு 4:
சுவாமிக்கு விளக்கு ஏற்றும் குத்துவிளக்கு, அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குபேர விளக்கு எதுவாகினும் அதில் ஒரு துண்டு கல் உப்பை போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் தீபம் சுடர் விட்டு நன்கு நின்று நேராக பிரகாசமாக எரியும். தீபசுடர் எப்போதும் சிறியதாக இருக்க வேண்டும். பெரிதாக இருந்தால் குங்குமப் பொட்டு மற்றும் பூவில் படுவதற்கு வாய்ப்பு உண்டு.
குறிப்பு 5:
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் இருக்கக் கூடிய விக்ரஹம் அல்லது படம் வீட்டில் வைத்திருந்தால் பணத்தட்டுப்பாடு வரவே வராது.
குறிப்பு 6:
பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது குறைந்தது வெற்றிலை, பாக்கு, பழம் ஆவது வைத்து வழிபட வேண்டும். அப்படி வைக்கும் வாழைப்பழம் மற்றும் வெற்றிலையின் காம்புகள் அப்படியே இருக்க வேண்டும். காம்பு இல்லாமல் வைத்தால் வேண்டிய வேண்டுதல் பலிக்காது என்பார்கள்.
குறிப்பு 7:
பூஜை அறையில் விளக்கேற்றும் திரிகளை ஒரு பொழுதும் எரிய விடக்கூடாது. ஒற்றைத் திரியாக போடக்கூடாது. ரெண்டு திரிகளை ஒன்றாக்கி போட வேண்டும். தீபத்தை குளிர வைக்கும் பொழுது திரியை எண்ணெயில் லேசாக இழுத்து விட்டு குளிர்விக்க வேண்டும். திரிகளை குப்பையில் போடக்கூடாது. சாம்பிராணி புகையுடன் போட்டு எரித்து விடுங்கள்.
குறிப்பு 8:
பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு படம் அன்னபூரணி. அன்னபூரணி தாயார் வழிபாடு வறுமையை போக்கி சுகபோக வாழ்வை கொடுக்கக் கூடியது. பூஜை செய்யும் போது அன்னபூரணிக்கு அரிசி போட்டு, பஞ்ச பூதங்களும் பூஜை அறையில் இருக்கிறதா? என்பதை அறிந்து பூஜை செய்ய, நினைத்த வேண்டுதல் உடனே பலிக்கும்.
குறிப்பு 9:
பூஜை அறையில் பணத்தை வைக்க கூடாது. பணம் பலரின் கைகளில் சென்று வருவதால் தோஷம் உள்ளதாக இருக்கிறது. பணம் வைத்து வழிபட்டால் பூஜை முடிந்ததும் பணத்தை எடுத்து விடுங்கள். நாணயங்களை நீரில் அலசி செம்பு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள குபேர யோகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரத நாட்களில் முருகன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்
குறிப்பு 10:
பூஜை அறையில் மாவிலை தோரணம் கட்டி அதற்கும் தீப, தூப, ஆரத்தி காண்பித்து வர வேண்டும். நிலை வாசலிலும் மாவிலை தோரணம் கட்டி இது போல செய்து வர மகாலட்சுமியின் அருளால் திருஷ்டிகள் கழிந்து, தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் சிறக்கும்.