
2025 ஆம் ஆண்டு, தை மாதத்தில் வந்திருக்கக்கூடிய முதல் தேய்பிறை அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை அன்று வர இருக்கிறது. 21-1-2025 செவ்வாய் கிழமை மதியம் 12:45 மணிக்கு அஷ்டமி திதி பிறந்துவிடுகிறது. ஆகவே செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் பைரவர் சன்னிதானத்திற்குச் சென்று தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொள்ளலாம். 22.1.2025 புதன்கிழமை மதியம் 2:51 மணி வரை அஷ்டமி திதியானது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை என்றாலே ருணம் தீர்க்கும் நாள். கடனை கரைக்க இந்த நாளில் பைரவர் வழிபாடு செய்வது அத்தனை சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும்.
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்யும்போது நமக்கு மன தைரியம் அதிகரிக்கும். கடன் சுமையிலிருந்து எப்படியாவது வெளிவந்து விடலாம் என்கின்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். மன தைரியமும் நம்பிக்கையுமே நம்மை பிரச்சனையிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான முதல் விஷயம்.
செவ்வாய்க்கிழமை மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று அங்கு இருக்கும் பைரவருக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் மிளகு தீபம் கட்டாயம் போட வேண்டும். சிவப்பு நிற சதுர வடிவில் இருக்கும் காட்டன் துணியில், 27 மிளகு வைத்து, முடிச்சு போட்டு அந்த மண்அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து கடன் சுமையை தீர்த்து வைக்க வழி காட்டு, கால பைரவா என்று மனம் உருகி பிரார்த்தனை செய்து வீடு திரும்பவும். வீடு திரும்பியதும் இரவு உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள்.
செவ்வாய்க்கிழமை இரவு, நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக உங்களுடைய கைகளில் 8 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். 8 மிளகையும் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்கள் தலையை 8 முறை சுற்ற வேண்டும். வலப்பக்கம் இருந்து இட பக்கம் மட்டும் 8 முறை சுற்றி, இந்த மிளகை நெருப்பில் போட வேண்டும். சின்ன மண் அகல் விளக்கில் ஒரு கற்பூரம் ஏற்றி, எட்டு மிளகையும் ஒன்றாக அந்த தீயில் போட்டு பொசுக்கி விடுங்கள்.
மிளகு அந்த நெருப்பில் போடும்போது என்னுடைய கடன் சுமையெல்லாம், இந்த நெருப்போடு நெருப்பாக பொசுங்கிப் போகட்டும் என்று சொல்லிக் கொண்டே மிளகை போட வேண்டும். மிளகு எப்படி அந்த நெருப்பில் வெடித்து சிதறுகிறதோ அதேபோல உங்களுடைய கடன் சுமையும் வெடித்து சிதறும். மிளகு வெடித்த பிறகு கற்பூரம் அணைந்த பிறகு அந்த சாம்பலை எடுத்து வெளியில் கொட்டி விடுங்கள். அவ்வளவுதான் பரிகாரம். கை காலை அலம்பி கொண்டு நீங்கள் தூங்கச் செல்லலாம்.
காலபைரவரையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு செய்து பாருங்கள். அடுத்த தேய்பிறை அஷ்டமி திதிக்குள் நிச்சயம் உங்களுக்கு இருக்கும், கடன் சுமை ஏதாவது ஒரு ரூபத்தில் குறைந்திருக்கும். கடன் சுமையை திருப்பி தருவதற்கு உண்டான வழியை அந்த ஈசன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான்.
அப்படி உங்களுடைய கஷ்டத்தில் ஏதேனும் சிறிதளவு குறைந்தது என்ற திருப்தி உங்களுக்கு வரும் பட்சத்தில், அடுத்த மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் உங்களால் முடிந்த பிரசாதத்தை கால பைரவருக்கு செய்து கொடுத்து, வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: பாவத்தை நீக்க துர்க்கை அம்மன் வழிபாடு
தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை பழ சாதம், இப்படி உங்களால் எது முடியுமோ, அதை செய்து கொண்டு போய் கோவிலில் கால பைரவருக்கு நெய்வேத்தியம் வைத்து, அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அல்லது ஏழை எளியவர்களுக்கும் தானமாக கொடுக்கலாம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.