
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய இந்த பஞ்சமி திதியை, வாராகி அவதரித்த தினமாக சொல்கிறார்கள். இந்த நாளுக்கு அபரிவிதமான சக்தி இருக்கிறது. மற்ற பஞ்சமி திதிகளில் வாராகியை வழிபாடு செய்ய தவற விட்டவர்கள் கூட, இன்று மாலை வாராஹியை மனதார நினைத்து பூஜை அறையில் பின் சொல்ல கூடிய முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டீர்கள் என்றால், உங்களுடைய குடும்ப கஷ்டங்கள் தீரும்.
குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருடைய பிரச்சனைக்கும் தனித்தனியாக தீர்வு காண முடியும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
பஞ்சமி திதி அன்று மாலை நேரத்தில் வாராஹி வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்லுவார்கள். இன்று மாலை 6:30 மணிக்கு மேலாக பூஜை அறையில் வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் வராகியின் திருவுருவப்படம் இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். வராஹியின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபம் தான் வாராகித்தாய் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
ஒரு கிண்ணத்தில் மாதுள முத்துக்களை உதிர்த்து போட்டு வாராஹிக்கு நெய்வேத்தியமாக வையுங்கள். உங்களுடைய வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அத்தனை சிவப்பு துணிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சதுர வடிவில் காட்டன் துணிகள் தேவை. புது துணையாக, இந்த துணி இருக்க வேண்டும். புது ஜாக்கெட் பிட் வீட்டிலிருந்தால் அதை கிழித்து எடுத்துக் கொண்டாலும் போதும்.
அந்த துணிக்கு நடுவே மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதில் ஒரு ரூபாயை வைத்து சிகப்பு துணியை சுருட்டி, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்களோ அத்தனை முடிச்சு தயார் செய்து விடுங்கள். பூஜை அறையில் குடும்பத்துடன் அமர்ந்து அவரவர் கையில் இந்த முடிச்சை வைத்துக் கொள்ளவும். வராஹியை மனதார நினைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை வாராஹித்தாயிடும் சொல்லி, அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
யார் யாருக்கு என்னென்ன வேண்டுதல் இருக்கிறதோ அதை எல்லாம் வாராகியிடும் சொல்லி, வாராகி நினைத்து கையில் இருக்கும் முடிச்சை தன்னுடைய தலையை 3 முறை சுற்றி வாராஹியின் பாதத்தில் வைத்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் வாராஹி திருவுருவப்படவில்லை என்றால் தீபத்துக்கு பக்கத்திலேயே இந்த முடிச்சை வைத்து விடலாம். (அவரவர் தேவைக்கு அவரவர் தான் வேண்டுதல் வைக்க வேண்டும். உங்கள் கஷ்டம் தீர நீங்கள் தான் இந்த முடிச்சை உங்கள் கையில் வைத்து உங்கள் தலையை சுற்றி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்றைய தினம் மேல் சொன்ன முறைப்படி வாராகியிடம் நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தாலும், அது அடுத்த பஞ்சமி திதிக்குள் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உங்களுடைய வேண்டுதல் நிறைவடைந்த உடன் இந்த முடிச்சை கொண்டு போய் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் வாராகியின் கோவில் உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: விபத்து ஏற்படாமல் இருக்க கருட பஞ்சமி வழிபாடு
வராகி கோவில் உங்க வீட்டு பக்கத்தில் இல்லை எனும் பட்சத்தில் ஏதாவது ஒரு அம்மன் சன்னிதானத்தில் கொண்டு போய் இந்த முடிச்சை உண்டியலில் போட்டு விடவும். வழிபாடு அவ்வளவுதான். இன்றைய சக்தி வாய்ந்த நாளை யாரும் தவறவிடாதிங்க. குடும்ப கஷ்டம் தீர அவரவருக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள, இன்றைய நாள் கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.