
ஆடி மாதம் என்றாலே அது தெய்வ வழிபாட்டிற்குரிய மாதமாக திகழப்படுகிறது. அந்த மாதத்தில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆடி மாதத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நாம் அனைத்து விதமான சுப காரியங்களையும் செய்ய முடியும். அந்த நாளில் நாம் செய்ய ஆரம்பிக்கக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த நாள்தான் ஆடி பதினெட்டாம் நாள். அதை நாம் ஆடிப்பெருக்கு என்று கூறுவோம். அந்த நாளில் நாம் செய்யக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் பெருகிக்கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு நாளன்று நம் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் பெருகுவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடிப்பெருக்கு என்பது காவிரி தாயையும் புனித நதிகளையும் வணங்க வேண்டிய ஒரு நாளாக கருதப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்று நீருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நாட்டில் பிறந்திருக்கிறோம் நாம். தாயைப் பழித்தாலும் பழிக்கலாம் நீரை பழிக்கக்கூடாது என்று பல பழமொழிகள் நீரின் பெருமையை பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த நீரை நாம் வீட்டில் தேவையில்லாமல் வீணாக்கினோம் என்றால் மகாலட்சுமி தாயார் வீட்டில் தங்க மாட்டார் என்று கூட கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நீரை வழிபடுவதற்கு சிறந்த நாளாக ஆடிப்பெருக்கு திகழ்கிறது.
ஆடிப்பெருக்கு நாளன்று ஒரு சொம்பில் நீரை பிடித்து அதை கையில் வைத்துக்கொண்டு அந்த நீரை இந்த உலகத்தில் ஓடுகின்ற புனித நீர்களாக நினைத்து அந்த நீருக்கு நன்றி கூற வேண்டும். “நீருக்கு நன்றிகள் கோடி, நீர் வாழ்க, நீர் வெல்க, நீரே போற்றி” என்று கூறவேண்டும். பிறகு அனைத்து விதமான புனித நதிகளையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த நீரை அந்த புனித நீராக கருதி சிறிது நாம் அருந்தி விட்டு மீதம் இருக்கக்கூடிய தண்ணீரை நம் வீட்டில் நாம் வளர்க்கக்கூடிய செடிக்கு ஊற்ற வேண்டும். வீட்டில் செடிகள் வளர்க்கவில்லை என்பவர்கள் வீட்டு வெளியில் தெருவோரமாக இருக்கக்கூடிய மரத்தடியில் கூட ஊற்றலாம்.
பிறகு அன்றைய தினம் மங்களகரமான பொருட்களை வாங்க வேண்டும். உப்பு, மஞ்சள் இயன்றவர்கள் தங்கத்தை கூட அன்றைய நாளில் வாங்கும் பொழுது அது பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சித்தர்கள் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. சித்தர்கள் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சித்தர்களை வழிபடலாம். அப்படி இல்லாத பட்சத்தில் வீட்டில் சித்தர்களுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்து உங்களுக்கு தெரிந்த சித்தர்களின் மந்திரத்தை உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்பு.
இப்படி உச்சரித்த பிறகு சிறிது பச்சரிசியை எடுத்து எறும்புகளுக்கு தானம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் தங்களால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்வது நல்லது. இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு நன்மைகளும் பெருகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே : செல்வம் பெருக ஆடிப்பெருக்கில் ஏற்ற வேண்டிய தீபம்
இந்த வழிமுறைகளை பாமர மக்கள் கூட செய்யலாம் என்பதால் முழு மனதோடு இந்த வழிமுறைகளை பின்பற்றி ஆடிப்பெருக்கு நாளன்று வழிபாடு செய்ய வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.