- Advertisement -

ஆடிப்பெருக்கு வீட்டில் வழிபாடு செய்யும் முறை

- Advertisement -

ஆடி மாதம் சிறப்புமிகுந்த மாதம் என்றாலும் அந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய சில குறிப்பிட்ட நாட்கள் மிகவும் சிறப்பு மிகுந்த நாட்களாக கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஆடிப்பெருக்கு. ஆடி மாதத்தின் 18 ஆம் நாளை தான் நாம் ஆடிப்பெருக்கு என்று கூறுவோம். பொதுவாக ஆடி மாதத்தில் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது, தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே உகந்த மாதம் அது என்றாலும் ஆடிப்பெருக்கு நாளன்று நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அந்த செயல் பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு நாள் அன்று தங்களுடைய தாலி கயிற்றை மாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொன்று தொட்டு நம்முடைய தமிழர் பண்பாட்டில் பின்பற்றி வரக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நாட்டில் ஓடுகின்ற புண்ணிய நதிகளை வணங்குவதற்குரிய ஒரு அற்புதமான நாளாகவும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஓடக்கூடிய காவிரி ஆற்றை வணங்குவதற்குரிய சிறப்பு மிகுந்த நாளாகவும் இந்த நாள் திகழ்கிறது. இந்த நாளில் நம்மால் ஆற்றங்கரைக்கு சென்று வழிபாடு செய்யாவிட்டாலும் வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்வதற்கும் முப்பெரும் தேவியரின் அருளை பெறுவதற்கும் இந்த ஆடிப்பெருக்கு மிகவும் சிறப்பு மிகுந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆடிப்பெருக்கு வழிபாடு

ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு என்றாலும் இதற்குரிய வழிபாட்டு முறையை அதற்கு முதல் நாளான ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி சனிக்கிழமை செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்றே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு சுத்தமான சொம்பை எடுத்து அது நிறைய தண்ணீரை பிடித்து அதில் ஒரு சிட்டிகை அளவு பச்சை கற்பூரத்தை போட்டு அதற்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்து அந்த தண்ணீரை மூட வேண்டும். மூடிய இந்த சொம்பை வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். இரவு முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் ஆடிப்பெருக்கு அன்று காலையில் எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அந்த சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து வீட்டில் வளர்க்கக்கூடிய துளசி செடிக்கு முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு சொம்பு அல்லது குடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒரு ஏலக்காய், சிறிதளவு பன்னீர், சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு இவை அனைத்தையும் போட வேண்டும். பிறகு நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை எடுத்து அதை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து அந்த சொம்பிற்கு மேல் வைக்க வேண்டும். இப்பொழுது கலசம் தயாராகிவிட்டது. இந்த கலசத்தை ஒரு தட்டு அல்லது இலையில் பச்சரிசியை கொட்டி பரப்பி அதற்கு மேல் வைக்க வேண்டும்.

- Advertisement -

கலசத்திற்கு வாசனை மிகுந்த மலர்களை மாலையாக போடலாம் அல்லது வீட்டில் தங்க ஆபரணங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த ஆபரணங்களையும் எடுத்துப் போடலாம். இவ்வாறு வைத்துவிட்டு சரஸ்வதி தேவியின் மந்திரங்களையும், மகாலட்சுமி தாயாரின் மந்திரங்களையும், பார்வதி தேவியின் மந்திரங்களையும் கூறி வாசனை மிகுந்த மலர்களால் அந்த கலசத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதோடு சேர்த்து புனித நதிகளின் பெயர்களையும் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த கலசத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் சர்க்கரை பொங்கல், பொரி உருண்டை, தேன் மிட்டாய், எள்ளுருண்டை ,கடலை மிட்டாய் போன்றவற்றை படையலாக போட வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு சுமங்கலி பெண்கள் தங்களுடைய தாலி சரடை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும் பொழுது கணவரின் கையால் கட்டிக் கொள்ளலாம் அல்லது வீட்டில் இருக்கக்கூடிய மூத்த சுமங்கல்களின் கையால் கட்டிக் கொள்ளலாம். பிறகு கலசத்தில் இருக்கக்கூடிய நீரை எடுத்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் தெளித்துவிட்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனைத்து பெண் தெய்வங்களின் அருளையும் பெற்று சிறப்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: தெய்வ சக்தி 5 அறிகுறிகள்

மிகவும் எளிமையான இந்த ஆடிப்பெருக்கு வழிபாட்டை அனைவரும் தங்களுடைய இல்லத்தில் செய்து அனைத்து பெண் தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -