
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்த பெண்களும், ஆண்களும் அவர்கள் முகத்தில் எந்தவித கருத்திட்டுகளும் இன்றி அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது. அதற்கு காரணம் அவர்கள் உபயோகப்படுத்திய ஒரு பூ தான். இந்த பூவை முகம் மற்றும் உடலில் தேய்த்து குளித்து வந்ததால் தான் அவர்கள் வயதான பிறகும் இளமையுடனும் பொலிவுடன் இருந்தார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அந்த பூ என்ன என்றும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த சோப்புகள், கிரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான ஜொலிஜொலிப்பு குறைந்து விடுகிறது. மேலும் அதனால் பல பக்க விளைவுகளும் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு பதிலாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த ஒரு பூவை மட்டும் நம் முகத்திலும் உடம்பிலும் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய இளமையை என்றென்றும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த பூ தான் ஆவாரம் பூ.
ஆவாரை இருக்க சாவார் உண்டோ என்ற ஒரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவை நாம் முறையாக உண்ணும் பொழுது நம் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கின்றது. அதேபோல் இந்த ஆவாரம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு தேய்ப்பதன் மூலம் தலைமுடிக்கு போதுமான போஷாக்கு கிடைக்கிறது. அதுமட்டுமா இதை நாம் முகத்திலும் உடம்பிலும் தேய்த்து குளிப்பதால் நம் முகம் என்றும் இளமையுடனும் பொலிவுடன் திகழ்கிறது.
முகத்தை தங்கம் போல் மின்ன வைக்க ஆவாரம் ஃபேஸ் பேக்:
பொதுவாக ஆவாரம் பூ டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கிடைக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த ஆவாரம் பூ தங்கத்திற்கு இணையாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் அனைத்து கிராமங்களிலும் தென்படும். இந்த பூக்களை பறித்து வந்து நிழலில் காயவைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.
பூக்கள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த பூக்கள் கிடைக்கும் அதையும் வாங்கி வந்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். காய்ந்த பூக்களும் கிடைக்காத பட்சத்தில் ஆவாரம்பூ பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அதையும் வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பூக்களாக கிடைக்கும் பட்சத்தில் 15 ஆவாரம் பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொடியாக கிடைக்கும் பட்சத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். அடுத்ததாக 1/4 ஸ்பூன் அளவுக்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து சிறிது பன்னீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் நன்றாக தடவி விட்டு 15 நிமிடம் காய விட வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை நாம் வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினோம் என்றால் நம் முகத்தில் இருக்கக்கூடிய பிக்மென்டேஷன் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். மேலும் கழுத்தில் இருக்கக்கூடிய கருமைகள் படிப்படியாக நீங்கும். அது மட்டும் அல்லாமல் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பது குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: முழு உடலும் தங்கம் போல ஜொலிக்க கிளியோபாட்ரா காலத்திலே பயன்படுத்திய இந்த சீக்ரெட் டிப்ஸை டிரை பண்ணுங்க.
தங்க பஸ்பத்திற்கு இணையாக நம் உடலை தங்கம் போல என்றும் இளமையாக ஜொலிப்புடன் திகழ வைக்கக்கூடிய இந்த ஆவாரம் பூவை முறையாக பயன்படுத்தி நாமும் பயனடைவோம்.