
ஆந்திரா மெஸ்சில் சாப்பிடும் அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவது ஆந்திரா பப்பு தான். இந்த பப்பு சுவையே ஒரு தனி ரகம். இதை சாப்பிடுவதற்காகவே பலர் ஆந்திரா மெஸ் போவதை நாம் பார்த்திருப்போம். ஏன், நாமே கூட இதை உண்பதற்காக சென்றிருப்போம். அப்படிப்பட்ட ஆந்திரா மெஸ் பப்புவை வீட்டிலேயே அதே சுவையில் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
ஆந்திரா பப்பு செய்ய தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 150 கிராம், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 8, தக்காளி – 6, தனியா – 1 டீ ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன், கரம் மசாலா – அரை டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
பப்பு செய்ய ஆரமிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே துவரம்பருப்பை ஊறவைத்துவிட வேண்டும். ஊறவைத்த துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து, அதோடு அறிந்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தனியா, சீரகம், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, குக்கரை மூடிவிட்டு 4 விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும். விசில் வந்து கேஸ் வெளியேறிய பிறகு குக்கரை திறந்து மத்து வைத்து நன்றாக கடைய வேண்டும். நன்றாக மசிந்த பிறகு மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து(மூடி போடாமல்), பப்பு சிறிது கெட்டி ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். பப்பு கெட்டி ஆனதும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
பப்பு தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 6 ஸ்பூன், கடுகு – அரை டீ ஸ்பூன், கடலை பருப்பு – அரை டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீ ஸ்பூன், சீரகம் – அரை டீ ஸ்பூன், வெங்காயம்(சிறிய அளவு) – 1, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 6, கருவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காய தூள் – சிறிதளவு
வாணலியில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு அதோடு நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் வதங்கியவுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும். கொத்தமல்லி இலைகள் சற்று வதங்கியதும் அதோடு பெருங்காய தூள் சேர்க்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதில் பப்புவை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதை கொதிக்க விட கூடாது. அவ்வளவு தான் ஆந்திரா பப்பு தயார். இதை சாததோடு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சுவை அப்படி இருக்கும்.