- Advertisement -
சமையல் குறிப்புகள்

காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடியை இப்படி அரைச்சு பாருங்க. ஆந்திராவுக்கே போய் பருப்பு பொடி சாப்பிட்ட திருப்தி நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

நம்மில் நிறைய பேர் திருப்பதிக்கு போய் இருப்போம். அங்கு ஹோட்டலில் கட்டாயமாக இந்த பருப்பு பொடி இருக்கும். சுட சுட சாதத்தோடு அந்த பருப்பு பொடியை கொஞ்சம் போட்டு, நெய்விட்டு சாப்பிட்டால் அப்பப்பா சொல்வதற்கு வார்த்தையே இருக்காது. அவ்வளவு அரிசி. ஆந்திரா ஹோட்டலில் கிடைக்கும் அதே சுவையில் பருப்பு பொடி நம்முடைய வீட்டில் செய்தால் எப்படி இருக்கும். ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி அப்படியே அச்சு மாறாமல் நம்முடைய வீட்டில் அரைப்போமா. வாங்க ரெசிபியை தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொடி செய்ய தேவையான பொருட்களை அளவுகளோடு முதலில் பார்த்து விடுவோம். துவரம் பருப்பு – 100 கிராம், பொட்டுக்கடலை – 50 கிராம், கொஞ்சம் பெரிய பூண்டு பல் – 10, மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமிளகாய் – 10, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொருட்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது காய்ந்ததும் முதலில் எடுத்து வைத்திருக்கும் பூண்டு பல்லை லேசாக தட்டி போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பூண்டின் ஈரப்பதம் நீங்கி பூண்டு லேசாக சிவந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள். அதன் பின்பு அதே கடாயில் துவரம் பருப்பை போட்டு வருக்கத் தொடங்குங்கள். எதையுமே எண்ணெய் ஊற்றி வருக்க கூடாது. ட்ரையாகத்தான் வருக்க வேண்டும். (எண்ணெய் ஊற்றி வருத்தால் சீக்கிரம் பருப்பு பொடி சிக்கு வாடை அடிக்கக்கூடும்.)

துவரம் பருப்பு பாதி அளவு சிவந்து வந்தவுடன், மிளகு, சீரகம், வரமிளகாய், இந்த 4 பொருட்களையும் போட்டு மீண்டும் வறுக்க தொடங்குங்கள். எல்லா பொருட்களும் சீராக வறுபட்டு வந்தவுடன், அடுப்பை அணைத்து இதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் வருத்து வைத்திருக்கும் பூண்டையும் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

வருத்த இந்த பொருட்கள் எல்லாம் ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பையும் போட்டு, கொஞ்சம் பெருங்காயத்தூள் போட்டு, எடுத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையையும் இதோடு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இட்லி பொடி போல ரொம்பவும் கொரகொரப்பாக அரைக்க கூடாது. ரொம்பவும் நைஸ் ஆகவும் அரைத்து கூடாது. 90 சதவிகிதம் இந்த பொடியை அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுடச்சுட சாதத்தில் இந்த பொடி போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் அம்புட்டு ருசி இருக்கும். வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: துவரம் பருப்பு கருகும்படி வறுக்க கூடாது. மணக்க மணக்க அதனுடைய நிறம் பொன்னிறம் வரும் அளவிற்கு வறுத்து, பக்குவமாக வைக்க வேண்டும். துவரம் பருப்பு ரொம்பவும் சிவந்து விட்டாலோ அல்லது வருபடாமல் இருந்தாலும் பருப்பு பொடியின் சுவை சரியாக வராது. மிளகு சீரகம் எல்லாமும் கருகாமல் இருக்க வேண்டும். பார்த்துக்கோங்க.

- Advertisement -