- Advertisement -
- Advertisement -

ஒரு வீட்டில் தாய், தந்தைக்கு பிறகு அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்கிற இந்த உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பு தான் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் என்று புராணங்கள் கூறுகிறது. சகோதரிக்கு சீர் கொடுக்கும் அண்ணன் வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. தங்கைக்கு அண்ணன் ஏன் சீர் கொடுக்க வேண்டும்? அதனால் உண்டாகக்கூடிய பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

மார்கண்டேய புராணத்தில் “மாதா, பிதா, ப்ராதா தர்ம கர்மத்தில் முக்கியம்” என்கிற ஒரு வாக்கியம் இதைப்பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது. இதில் ப்ராதா என்பது அண்ணனை குறிக்கும் சொல்லாகும். ஒரு சகோதரி துன்பத்தில் இருந்தால், அதற்கு உதவுவது ப்ராதாவின் அதாவது அண்ணனின் கர்மா தர்மம். சகோதரி துன்பத்தில் இருக்கும் பொழுது உதவுவது தான் உடன்பிறந்தவனின் தலையாய கடமையாகும். இதனால் அவன் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவான் என்பது நம்பிக்கை. ஒருவன் தன் சகோதரிக்கு நல்லது செய்தால், அவனை போற்றும் முனிவர்களுக்கு கூட அதனுடைய புண்ணியத்தில் பங்கு கிடைக்கும். அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த அளவிற்கு இந்த செயல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று!

- Advertisement -

“தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடும்” என்பார்கள். உறவுகளுக்குள் எவ்வளவு விரிசல்கள் இருந்தாலும், அவர்களுக்கு ஒன்று என்றால் நம் மனம் நம்மை அறியாமல் துடிதுடித்து போக வேண்டும். அதுதான் தர்மம் ஆகும். உங்கள் கர்ம புண்ணியத்தில் தங்கைக்கு சீர் கொடுப்பதும் மிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. திருமணம், வளைகாப்பு என்ற அடுத்தடுத்து வரும் முக்கிய விசேஷங்களில் உங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய தங்கைக்கு நீங்கள் சீர் கொடுக்க வேண்டும். இதனால் அவள் மிகுந்த பாதுகாப்பான உணர்வையும், அரவணைப்பையும் உணர்வாள்.

எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு இன்னொரு வீட்டிற்கு புதிதாகப் போகும் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் செய்யும் அதிகபட்ச மரியாதை மற்றும் அன்பு இதுவாகத்தான் இருக்க முடியும் அல்லவா? அவளுடைய குடும்பத்திற்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் இதனால் செல்வ செழிப்பு ஏற்படும். நீங்கள் கொடுப்பதை மனம் உவந்து கொடுக்க வேண்டும். கடமை என்று செய்யக்கூடாது. அது போல் நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய மனைவி அல்லது உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.. அப்போதுதான் உங்களுடைய குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

“யத்யத்கிஞ்சித் பிதா தஸ்யை ப்ரதிகுர்யாத் ப்ரதீச்சதி
ப்ரேம்ணா வாபி ப்ரயச்சேத் ஸத்ஸ தத்ஸ்த்ரீணாம் ஸ்வதந்த்ரணம்”

தந்தை, சகோதரன், கணவன் என பெற்றவர்களால் பெண்ணுக்கு தரப்படும் பொருள் அனைத்தும் ஸ்த்ரீதானம் என்று சொல்லுவார்கள். அவை தங்கம், சொத்துக்கள், வஸ்திரம் நிலம், பணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஸ்த்ரீ தானம் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அவளுக்கே சொந்தம், அது தர்ம ரீதியாக புனிதமானது.

இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டம் நீங்க பரிகாரம்

இந்த புனிதமான பொருட்களைக் கொண்டு அவள் ஆரம்பிக்கும் தொழில் மற்ற விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதன் மூலம் வரக்கூடிய லாபம் அதிகமாக இருக்கும். ஆக சகோதரன் சகோதரிக்கு சீர் கொடுத்தால் உறவுகளும், பாசப்பிணைபும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கர்ம தர்மமும், ஆன்மீக வளர்ச்சியும் ஏற்படும் என்பது ஐதீகம். எனவே சகோதரிகளிடத்தில் சுயநலம் பார்க்காமல் அவர்களுக்கு மனமார்ந்த உதவி செய்து பாருங்கள. அது பன்மடங்கு பெருகி உங்களுக்கே வந்து சேரும்.

- Advertisement -