
இன்று வெள்ளிக்கிழமை 4-7-2025 ஆஷாட நவராத்திரியின் 9வது நாள். இன்றைய தினம் தஞ்சை நகரில், பெரிய கோவிலில் இருக்க கூடிய வாராஹிக்கு காய்கறிகளால் அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு நிமிடம் வாராஹியை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்வோமா.
இந்த வாராஹி நவராத்திரியில் மற்ற 8 நாட்களில் வாராகி வழிபாடு செய்யாதவர்கள் கூட, இன்றைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த ஆஷாட நவராத்திரி நிறைவு தினத்தில், வாராசியை வணங்கி வீட்டில் இருந்தே வழிபாடு செய்து, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை படித்து வேண்டிக் கொண்டால், வாராகியின் பரிபூரண அருள் ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். அந்த தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் வாராஹி தேவியை நேரில் சென்று, தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு கூட இந்த வழிபாடு ஒரு நல்ல பலனை கொடுக்கும்.
உங்களுடைய குடும்பத்தில் தீராத துன்பங்கள், கஷ்டங்கள் எதிரியால் தொல்லை, வீட்டில் வறுமை இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அல்லது வீட்டில் இருக்கும் பெண்களுக்கோ ஆண்பிள்ளைகோ திருமணம் நடக்காமல் இருந்தாலும் சரி, குழந்தை பாக்கியம் வேண்டும் என்றாலும் சரி, நோய் நொடி தீர வேண்டும் என்றாலும் சரி, சுப காரிய தடைகள் விலகவும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் வாராகியின் திருவுருவப்படம் சிலை எதுவுமே இல்லை என்றாலும், பரவாயில்லை. இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல, பூஜையறையை, பூஜைக்காக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கோரிக்கையை வாராகி அம்மனிடம் சொல்லுங்கள். பிறகு இந்த மந்திரத்தை 27 முறை படித்துவிட்டு, இறுதியாக தீப தூப ஆராதனை காண்பித்து, உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
வாராஹி அன்னைக்காக ஏதாவது ஒரு கிழங்கு அவித்து நெய்வேதியமாக வைத்து விடுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு, அந்த கிழங்கை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக சாப்பிடுங்கள். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு மாதுளம் பழத்தை உதிர்த்து முத்துக்களை வாராஹிக்கு இன்று பிரசாதமாக வைக்கலாம். ரொம்ப ரொம்ப நல்லது.
பஞ்ச பூத ரூபிணி பயங்கரி வாராஹி
தஞ்சை நகர் உறைகின்ற சங்கரி வாராஹி
நஞ்சுண்டவன் நாயகி நலம் தரும் தேவி வாராஹி
தஞ்சம் என்று அடைந்தோம் தேவி வாராஹி
இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாள் ஏற்ற வேண்டிய தீபம்
இவ்வளவுதான். எளிமையான தமிழ் வரிகளில் இருக்கக்கூடிய மந்திரம் இது. வாராகி அன்னையை நினைத்து பிரார்த்திப்போம். அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.