
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த தெய்வங்கள் இருக்கின்றன. அந்த வகையில் மூல நட்சத்திரத்திற்குரிய சிறப்பான தெய்வமாக திகழ்பவர் ஆஞ்சநேயர். மூல நட்சத்திரம் இருக்கக்கூடிய நாளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை தரும். அதே மூல நட்சத்திரம் ஆவணி மாதத்தில் வரும் பொழுது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதோடு சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி ஆவணி மூல நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவ அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி மாதத்தில் வரக்கூடிய மூல நட்சத்திர நாளன்றுதான் சிவபெருமான் பலவிதமான திருவிளையாடல்களை மேற்கொண்டார் என்றும், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்ப அடி பட்டதும் அன்றைய தினத்தில் தான் என்றும் கூறப்படுகிறது. அதனால் இன்றளவும் மதுரையில் ஆவணி மூல நட்சத்திர நாளன்று மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடுகள் நடைபெறும். மேலும் பிரசித்தி பெற்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் மலைக்கோவில் அமைவதற்கு காரணமான திருவிளையாடல் நடைபெற்ற நாளாகவும் இந்த ஆவணி மூலம் நட்சத்திர நாள் திகழ்கிறது. அப்படிப்பட்ட ஆவணி மூலத்தில் சிவ அருளை நாம் பரிபூரணமாக பெறுவதற்கு ஒரு எளிமையான சிவ வழிப்பாட்டை செய்யலாம்.
ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரம் என்பது செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. அன்றைய நாளில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. வழிபாடு செய்துவிட்டு ஆலயத்திலேயே அமர்ந்து “ஓம் சிவ சிவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஆவணி மூலம் எப்படி சிவபெருமானுக்கு உரிய நாளாக திகழ்கிறது அதேபோல்தான் ஆஞ்சநேயருக்கு உரிய நாளாக திகழ்கிறது என்பதால் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயரை வழிபாடு செய்து விட்டு “ஜெய் ஸ்ரீ ராம்” என்று 111 முறை கூறவோ அல்லது எழுதவோ செய்ய வேண்டும். திருச்சி அருகில் இருக்கக்கூடியவர்கள் இன்றைய தினத்தில் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்வதோடு திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலை கிரிவலம் வருவதன் மூலமும் நல்ல பலனை பெற முடியும்.
ஆவணி மூல நட்சத்திர நாளன்று சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான தேவர்களின் அருளும் கிடைக்கும் சிவ தரிசனம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாகும். ஆஞ்சநேயரும் சிவ ஸ்வரூபமாக திகழக்கூடியவர் என்பதால் சிவ வழிபாட்டோடு ஆஞ்சநேய வழிபாட்டையும் இன்றைய தினம் மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செப்டம்பர் மாதம் நல்லது நடக்க செய்ய வேண்டிய வழிபாடு
பலவிதமான திருவிளையாடல்களை நடத்திய நாளாக இந்த ஆவணி மூலம் நாள் திகழ்கிறது. இன்றைய நாளில் சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து சிவ மந்திரத்தை கூறுபவர்களுக்கு சிவ அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பகுதியை நிறைவு செய்து கொள்கிறேன்.