
பாதாம் அல்வா. அந்த பட்டர் ஷட்டில் மடித்து கடைகளில் விற்கும். சில கல்யாண பந்திகளில் வைப்பார்கள். ஆஹா என்ன ருசி. இன்னொரு பாதாம் அல்வா கிடைக்குமா என்று கேட்க கூச்சமாக இருக்கும். அந்த அளவுக்கு சுவை நாவில் ஓட்டிக்கொள்ளும். இப்படி ஒரு பாதாம் அல்வாவை நம் கையாலேயே நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். கவலையே படாதீங்க. அல்வா பதம் தவறவே தவறாது. உங்க வீட்ல, உங்க கையால இன்னைக்கு இந்த பாதாம் அல்வாவை செய்யலாமா. சூப்பரான பாதாம் அல்வா ரெசிபி இதோ உங்களுக்காக. இதை செய்யறதும் ரொம்ப ரொம்ப ஈஸி தான். வாங்க ரெசிபியை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.
முதலில் 1/4 கிலோ அளவு பாதாமை எடுத்து சுடுதண்ணீர் ஊற்றி ஊற வைத்து, அந்த தோலை உரித்து கொள்ளவும். இரண்டு மணி நேரம் பாதாம் சுடு தண்ணீரில் ஊறினால் கூட போதுமானது. ஊற வைத்த இந்த பாதாமை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பால் ஊற்றி நைசாக விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த 250 கிராம் அளவு பாதாமுக்கு, 200 கிராம் சர்க்கரை தேவைப்படும். 250 கிராம் நெய் தேவைப்படும். அதையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் பால் ஊற்றி அதில் 2 சிட்டிகை குங்குமப்பூ போட்டு, ஊற வைத்து விடுங்கள். இது கலருக்காக விருப்பமுள்ளவர்கள் சேர்க்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இதை ஸ்கிப் செஞ்சுருங்க. ஆனா, குங்குமப்பூ சேர்க்கவில்லை என்றால் கடையில் வாங்கும் பாதாம் அல்வாவின் கலர் கிடைக்காது.
இப்போது பாதாம் அல்வாவை செய்ய தொடங்கலாம். வாங்க அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பாதாம் விழுதை அதில் ஊற்றி, கைவிடாமல் கலக்குங்கள். இந்த பாதாமின் பச்சை வாடை போகட்டும். பாதாமின் பச்சை வாடை நீங்கியதும் குங்குமப்பூ ஊற வைத்திருக்கும் பாலை, கடாயில் இருக்கும் பாதாம் விழுதில் ஊற்றி, மீண்டும் கலந்து கொண்டே இருங்கள்.
குங்குமப்பூ ஊற்றியவுடன் இந்த பாதாமின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும். ஏழிலிருந்து எட்டு நிமிடங்கள் மிதமான தீயில் இந்த பாதாமை கடாயில் வதக்கி விட்டால் போதும். அடுத்து எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை கடாயில் இருக்கும் பாதாம் விழுதில் ஊற்றி கைவிடாமல் கலந்து கொண்டே இருந்தால் இது அல்வா பதத்திற்கு வரும். கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
சர்க்கரையை பாதாமில் போட்டவுடன் சர்க்கரை இளகி, உருகி மீண்டும் கட்டிப்பட்டு வரும் சமயத்தில், எடுத்து வைத்திருக்கும் 200 கிராம் அளவு நெய்யை அல்வாவில் ஊற்றி, மீண்டும் கைவிடாமல் கலக்க வேண்டும். ஊற்றிய நெய்யெல்லாம் பாதாம் அல்வா குடித்து விடும். இறுதியாக இப்படி கிண்டி விட்டுக் கொண்டே இருக்கும்போது, நெய் எல்லாம் ஒரு கட்டத்தில் பிரிந்து வந்தால் பாதாம் அல்வா தயார்.
அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பின்பு அப்படியே சாப்பிடலாம். தேவைப்பட்டால் இதை பட்டர் ஷீட்டில் ஸ்கொயர் ஷேப்பில் வைத்து மடித்தும் சாப்பிடலாம். அது நம்முடைய விருப்பம் தான். கடையில் வாங்கிய பாதாம் அல்வா ருசி இதில் நிச்சயம் இருக்கும். எந்த கலப்படமும் இல்லாமல் நம் கையால் செய்த பாதாம் அல்வா ரெசிபி. பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.