
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர்தான் கால பைரவர். மேலும் இவர் அனைத்து கிரகங்களுக்கும் குருவாகவும், அதிலும் குறிப்பாக சனீஸ்வர பகவானுக்கு குருவாகவும் திகழக்கூடியவர். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், எப்பேர்ப்பட்ட பயமாக இருந்தாலும், எப்பேற்பட்ட எதிரிகள் தொல்லையாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக தான் கால பைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி அன்று வீட்டில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய தடைகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகள் விலக வேண்டும் என்று நினைப்பவர்களும், மன பயம், எம பயம் போன்ற அனைத்து விதமான பயங்களும் விட்டு விலக வேண்டும் என்று நினைப்பவர்களும் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட காலபைரவரை வீட்டில் எளிமையான முறையில் வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி என்பது ஜூன் மாதம் 18ம் தேதி காலை 10:58 மணிக்கு தொடங்கி மறுநாள் ஜூன் மாதம் 19ஆம் தேதி காலை 8 :58 மணி வரை இருக்கிறது. அதனால் நாம் பைரவரை வழிபாடு செய்வதற்கு ஜூன் மாதம் 18ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து ஜூன் மாதம் 19ஆம் தேதி காலை 9 மணிக்குள் இருக்கக்கூடிய நேரத்தில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கும் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை வீட்டில் செய்வதற்கு பைரவரின் சிலையோ, படமோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலபைரவரின் சிலை, படம் இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், புனுகு வைத்துக் கொள்ளுங்கள். சிலை இருக்கும் பட்சத்தில் பன்னீரால் அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். அப்படி படமோ, சிலையோ இல்லை என்பவர்கள் பைரவரை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் நல்லெண்ணெய் தீபமாக இருக்க வேண்டும். ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் 54 எண்ணிக்கையில் மிளகை போட்டு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி காலபைரவரின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை கூறி 108 முறை அந்த விளக்கிற்கு முன்பாக அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால பைரவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அவரின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.
“ஓம் கால பைரவாய நமோ நமஹ”
இதையும் படிக்கலாமே: விரலி மஞ்சள் வழிபாடு
அனைத்து சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக இருக்கக் கூடிய கால பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த முறையில் வீட்டில் வழிபாடு செய்பவர்களுக்கும் கால பைரவர் காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றுவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.