
பாகற்காயை வைத்து அருமையான சுவையில் அட்டகாசமான ஒரு பொடி ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த பொடியை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்களுக்கு மேல் 15 நாட்களுக்குள் நன்றாக இருக்கும். சுடச்சுட சாதத்தில் இந்தப் பொடியை போட்டு பிசைந்து சாப்பிட்டால் ஆஹா அட்டகாசம். கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் அமிர்தம் போல தான் இருக்கும். சுவையான வித்தியாசமான பாகற்காய் பொடி எப்படி தயார் செய்வது. இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன், ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துவிட்டு இதோடு வரமல்லி – 1 ஒரு ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் 30 செகண்ட்ஸ் வரை வறுத்து கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பருப்பு வகைகளோடு 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூளை போட்டு மிளகாய்தூளை கருகாமல் வதக்கி, கடாயில் இருக்கும் இந்தப் பொருட்களையெல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு தான் மிளகாய் துளை போடவேண்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மிளகாய்தூள் கருதிவிடக்கூடாது.
அடுத்தபடியாக அந்த கடையை நன்றாக கழுவி விட்டு, மீண்டும் அடுப்பில் வையுங்கள். கடாயில் 1/2 கப் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 1 கைப்பிடி அளவு வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து, எண்ணெயை வடித்து வேர்க்கடலையை தனியாக எடுத்து வைத்து நன்றாக ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் மீதம் இருக்கும் அல்லவா. அதில் 20 பல் பூண்டை லேசாக தட்டிப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து இதையும் வேர்க்கடலையுடன் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக இரண்டு கொத்து கருவேப்பிலைகளை அதே எண்ணெயில் போட்டு மொறு மொறுவென்று வறுத்து தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக 300 கிராம் அளவு வட்ட வடிவில் நைசாக வெட்டிய பாகற்காய் கடையில் இருக்கும் எண்ணெயில் போட்டு பாகற்காய் மொறுமொறுவென வரும் அளவிற்கு வறுக்கவேண்டும். பாவக்காய் மொறுமொறுவென வழிபட 8ல் இருந்து 10 நிமிடங்கள் வரை எடுக்கும். வறுபட்ட இந்த பாவக் காய்களையும் எண்ணெயில் இருந்து வடித்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எல்லா பொருட்களும் நன்றாக ஆறட்டும். மிக்ஸி ஜாரில் ஏற்கனவே மிளகாய்தூள் போட்டு மசாலா பொருட்களை வைத்திருக்கிறோம் அல்லவா, அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பூண்டு, கருவேப்பிலை, பாகற்காய் இவை அனைத்தையும் போட்டு, இதோடு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு, இந்த பொருட்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். சுவையான பாகற்காய் பொடி தயார்.
வித்தியாசமான பொடி ரெசிபி தானே இது. பாகற்காய் கசப்பு தெரியும்னு பாக்கறீங்களா. நிச்சயமா கசப்பு நிறைய தெரியாது. சுட சுட சாதத்தோடு இதைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் காரசாரமாக நல்ல வாசத்தோடு வெரைட்டி சாதம் போல நமக்கு ஒரு டேஸ்ட் கிடைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
பின்குறிப்பு: வேர்க்கடலை பாகற்காய் இவைகளை வறுப்பதற்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை பயன் படுத்திக்கொள்ளுங்கள். அதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.