
ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முடி உதிர்தல். எந்தவித வயது வித்தியாசமும் இன்றி அனைவருக்கும் இந்த முடி உதிர்தல் பிரச்சனை தருகிறது. இதற்காக கடைகளில் பல வகையான எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. அந்த எண்ணெய்களை நாம் உபயோகப்படுத்தாமல் நாமே நம் வீட்டில் தயாரிக்கும் அற்புதமான எண்ணையை உபயோகப்படுத்தினால் அதனால் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. அப்படிப்பட்ட பக்க விளைவுகள் அற்ற முடிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய அதி அற்புதமான எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட பல காரணங்களை கூறலாம். அவற்றில் மிகவும் முக்கியமானதாக பொடுகு தொந்தரவு, முடி வலுவிழந்து இருப்பது, தலையில் இருக்கும் சருமம் வறண்டு போய் இருப்பது, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக மாத்திரைகளை உட்கொள்வது, உடல் சூடு போன்றவை பொதுவான பிரச்சினைகள் ஆகும். இதை தவிர்த்து வேறு சில காரணங்களும் இருக்கலாம். மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதோடு முடிக்கு நல்ல கருமை நிறத்தையும் தரக்கூடிய அற்புதமான எண்ணையை வீட்டில் தயாரிக்கும் முறையை பார்ப்போம் வாருங்கள்.
இந்த எண்ணையை தயாரிப்பதற்கு நமக்கு வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவைப்படும். முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பு மிகவும் குறைந்த தீயில் எரிய வேண்டும். இப்பொழுது அந்த கடாயில் நான்கு ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் மிளகை சேர்க்க வேண்டும். இரண்டையும் லேசாக வறுக்க வேண்டும். மனம் வர ஆரம்பிக்கும் பொழுது அதில் கால் கப் அளவு கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும்.
நன்றாக வறுத்தப் பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். ஆறிய இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கால் கப் அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் சேர்க்க வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துவிட்டு ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். எண்ணெய் நன்றாக கொதித்து அந்த பொடியில் இருக்கும் சாறு அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கி, எண்ணெய் பச்சை நிறமாக மாறிவிடும். இப்பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள்.
எண்ணெய் நன்றாக ஆறியதும், அதை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் இருக்கும் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி முடி உதிர்தலை தவிர்த்து விடும். மேலும் மிளகில் இருக்கக்கூடிய காரத்தன்மை தலையில் இருக்கக்கூடிய பேன், பொடுகு போன்ற தொந்தரவில் இருந்து நம்மை வெளியில் கொண்டு வரும். கருவேப்பிலையில் இருக்கும் அதி அற்புதமான சத்துக்களால் தலைமுடி கருமை நிறத்துடனும் வளரும்.
இதையும் படிக்கலாமே: தலைக்கு குளிக்கும்போது ஒரு முடி கூட கொட்டக் கூடாதா? அப்ப ஷாம்புவை, ஒரு முறை இப்படி போட்டு தலைக்கு குளிச்சு பாருங்க. ஒரு முடி கூட பாத்ரூமில் உதிர்ந்து இருக்காது.
மிகவும் எளிமையாக, எப்பொழுதும் நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி எண்ணெய் தயாரித்து நம் தலைக்கு தேய்த்து முடியை நன்றாக பாதுகாத்துக் கொள்வோம்.