
இந்த உலகத்திற்கே செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். அதே போல் தான் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கக்கூடிய மகாலட்சுமியாக கருதப்படுபவர் அந்த வீட்டில் இருக்கக் கூடிய இல்லத்தரசி தான். அப்படிப்பட்ட இல்லத்தரிசி நினைத்தால் அந்த வீட்டை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் மாற்ற முடியும். ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்கும், உரு தெரியாமல் அழிந்து போவதற்கு அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தான் காரணமாக திகழ்வார்கள் என்று பலரும் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது நிதர்சனமான உண்மையே.
ஆண்கள் எப்படிப்பட்ட மோசமான நபர்களாக இருந்தாலும் பெண்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் தலையெழுத்தை அவர்களால் மாற்ற முடியும். அப்படி குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு செய்யக்கூடிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீட்டில் இருக்கக்கூடிய அனைவரின் தலையெழுத்தையும் மாற்றுவதற்கு பெண்கள் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய செயல்களையே சற்று தெளிவாக செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செயல்களை பற்றி பார்ப்போம்.
முதலில் பெண்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பாக இருக்கக்கூடிய 48 நிமிடங்கள். அந்த நேரத்தில் எழுந்து வீட்டு வாசல் கதவை திறப்பதற்கு முன்பாக பின் வாசல் கதவு இருக்கும் பட்சத்தில் அந்த கதவை திறந்து விட்டு பிறகு முன் வாசல் கதவை திறக்க வேண்டும். பின் வாசல் கதவு இல்லை என்றால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து பிறகு தான் வாசல் கதவை திறக்க வேண்டும்.
இவ்வாறு வாசல் கதவை திறந்த பிறகு வாசனையும் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும். இந்த தண்ணீரில் சாணம், மஞ்சள், கோமியம் இவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து தெளித்து கோலம் போட வேண்டும். அடுத்ததாக நிலை வாசலை சுத்தம் செய்த அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து இரண்டு புறங்களிலும் இரண்டு மலர்களை வைத்து ஒரு சிறிய தட்டை எடுத்து அதற்கு மேல் அகலை வைத்து இரண்டு புறங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
அடுத்ததாக வீட்டு பூஜை அறைக்கு வந்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக பெண்கள் கண்டிப்பாக முறையில் புடவை அணிந்து பொட்டு வைத்து பூ வைத்து மங்களகரமாக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் பெண்கள் எந்த அளவிற்கு மங்களகரமாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் என்பது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பெண்கள் எப்பொழுது தீபம் ஏற்றினாலும் மங்களகரமாக இருந்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது வீட்டில் யாரும் தூங்கக்கூடாது. தீபம் ஏற்றுவதற்கு முன்பாக அவர்களை எழுப்பி விட்டு பிறகு தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு. அதேபோல் சமையல் அறையில் எச்சில் பாத்திரங்களோ முதல் நாள் இரவு சமைத்த பாத்திரங்களையோ கழுவாமல் வைத்துக்கொண்டு தீபம் ஏற்றினால் அந்த தீபத்தில் எந்தவித பலனும் இல்லை. அவை அனைத்தையும் சுத்தம் செய்து வைத்த பிறகு தான் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி இந்த விஷயங்களை எந்த ஒரு வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மேற்கொள்கிறார்களோ அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க ஆகாச கருடன் கிழங்கு பரிகாரம்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய இந்த வழிபாட்டால் முப்பெரும் தேவிகளும் அவர்கள் வீட்டிற்கு வந்து அருளாசி புரிந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அனைத்து விதமான நன்மைகளும் வாரி வழங்குவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.