- Advertisement -
சமையல் குறிப்புகள்

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட கத்தரிக்காய், பச்சை மிளகாய் வைத்து இப்படி ஒரு குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு சூப்பரான சுவையில் இருக்கும்

- Advertisement -

எப்பொழுதும் போல இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சாம்பார், சட்னி என்று செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் கேட்கின்ற ஒரே ஒரு வார்த்தை இதுதான். இதைத் தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் செய்ய தெரியாதா? என்று. ஆனால் இட்லி, தோசைக்கு வேறு என்ன வித்தியாசமாக செய்ய முடியும் என்று பல குடும்ப தலைவிகளும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எதையாவது வித்தியாசமாக முயற்சி செய்தால் அவை ருசி இல்லாமல் போய் விடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள சரியான முறையை பின்பற்றி பக்குவமாக செய்தால் இந்த கத்தரிக்காய் குருமா இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். எப்பொழுதையும் விட சற்று அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 10, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், தேங்காய் – 5 சில்லு, சோம்பு – அரை ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காய்களின் காம்பை மட்டும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பிறகு குக்கரில் கத்தரிக்காய், பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு மற்றும் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பிறகு குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து, அதில் தண்ணீர் அதிகமாக இருந்ததென்றால் அதனை தனியாக வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை பருப்பு கடையும் மத்து வைத்து கடைந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் 5 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு, அதனுடன் அரை ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை, சிறிய துண்டு பட்டை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் குருமா தயாராகிவிட்டது.

- Advertisement -