- Advertisement -

உங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருக்கிறது என்பதை பாருங்கள்! அதனால் கிடைக்கும் பலன்கள் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

ஜாதகத்தில் மற்ற கிரகங்களை விட சூரியனும், சந்திரனும் மிக மிக முக்கியமான கிரகங்களாக இருக்கின்றன. இவற்றின் அடிப்படையை வைத்தே மொத்த ஜோதிடமும் கணித்து கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய ஜாதகத்தில் சந்திரனுடன் எந்த கிரகம் சேர்ந்திருந்தால் என்ன பலன்கள் நமக்கு கிடைக்கும்? என்றும், எந்த மாதிரியான வாழ்வு நமக்கு அமைந்திருக்கும் அல்லது அமைய இருக்கிறது? என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருந்தால் என்ன பலன்?
சந்திரன் என்பது மனம். நம்முடைய மனதை குறிப்பது தான் சந்திரன். சூரியன் என்பது ஆன்மா ஆகும். மனமும் ஆன்மாவும் சேர்ந்தால் பித்ரு தோஷத்தை குறிக்குமாம். இவர்கள் பித்ரு தோஷத்தை நீக்குவதற்கு பரிகாரங்கள் செய்ய வேண்டும். இவர்கள் வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இவர்கள் எவ்வளவு அதிகமாக சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் செலவு செய்வதில் அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் மீது அதிக பாசம் இருக்காது. விளையாட்டு விஷயங்களில் அதிக ஈடுபாடு இவர்களுக்கு இருக்கும். துவர்ப்பு சுவையை விரும்பி உண்பவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன், வீரத்தைக் குறிக்கும் செவ்வாய் பகவான் சேர்ந்திருந்தால் சந்திர மங்கள யோகம் உண்டாகும் என்பார்கள். இவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்ட தைரியசாலிகளாக இருப்பார்கள். கசப்பு சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் உடன்பிறந்த சகோதரிகள் இருக்க மாட்டார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களில் இவர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

சந்திரனுடன் புதன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன், புத்தியை குறிக்கும் புதன் பகவான் சேர்ந்து இருந்தால், அறிவாற்றல் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். வான் சார்ந்த ஆராய்ச்சி, ஜோதிடம், கணிதவியல், தணிக்கை, கல்வி போன்ற துறைகளை சார்ந்து இவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் சொந்த உறவுகளில் திருமணம் நடக்கும். அதிகம் பெண் குழந்தைகள் தான் இவர்களுக்கு பிறக்கும்.

- Advertisement -

சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன், வேதத்தை அம்சமாக கொண்ட குருபகவான் சேர்ந்திருக்கும் பொழுது குரு சந்திர யோகம் உண்டாகக்கூடும். இவர்களுக்கு எதிர்பாராத வகையில் பண வரவுகள் திடீரென வந்து சேரும் அமைப்பு உருவாகும். பொன், பொருள், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இவர்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஆன்மீகத்திலும் இறை நெறியிலும், பொது பணியிலும் இவர்கள் அதிகம் ஈடுபாடு காண்பிப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் ஆண் குழந்தை பிறக்கும்.

சந்திரனுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன் கலைக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் கலைகளிலும், ரசனையிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். பாட்டு, நடனம், நடிப்பு, ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்களில் இவர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். தன்னுடைய வீட்டையும், தான் இருக்கும் இடத்தையும் கலைநயத்துடன் சுத்தமாக வைத்திருப்பார்கள். இனிப்பு சுவையை அதிகம் விரும்பும் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது குறைவாக இருக்கும். இவர்கள் சொல்வது பல நேரங்களில் உண்மையில் பலித்துவிடும். இவர்களின் இஷ்ட தெய்வமாக அம்பாள் எப்போதும் இருப்பாள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டிருக்கும் இவர்கள் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

- Advertisement -

சந்திரனுடன் சனி சேர்ந்திருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன் சனிபகவான் சேர்ந்திருந்தால் இவர்கள் பெரும்பாலும் அடிமையாக வாழ்வார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இவர்களுக்கு வந்தாலும் அதை அனுபவிக்கும் வாய்ப்புகள் கிட்டாமல் போய்விடும். குடும்பப்பற்று அதிகம் இருக்கும் இவர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்கள் பணம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். கார உணவுகளை விரும்பி சாப்பிடும் இவர்கள் குடும்பத்திற்காக பாடுபடுபவர்கள்.

சந்திரனுடன் ராகு சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன் திரட்டு புத்தியுள்ள ராகு பகவான் சேர்ந்திருந்தால் மாமனார் மாமியார் வகையில் இவர்களுக்கு எப்போதும் தொல்லைகள் இருக்கும். தம்பதியருக்குள் எப்போதும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஒரு வேலையில் நிரந்தரமாக இவர்களால் இருக்க முடியாது. உடன்பிறப்பு இவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும். தலைவலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் அடிக்கடி இவர்களுக்கு உண்டாகும். இவர்கள் உரிய பரிகாரங்களைச் செய்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதி அடைய முடியும்.

சந்திரனுடன் கேது சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
மனமாகிய சந்திரனுடன் ஞானம் என்பதைக் குறிக்கும் கேது பகவான் சேர்ந்து இருப்பது என்பது மிகவும் நல்ல அமைப்பாகும். அதிக அறிவாற்றல் கொண்ட இவர்கள் அதனை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களாக இருப்பார்கள். யாருடனும் அதிகம் பேசாத இவர்களை புரிந்து கொள்வது என்பது சற்று கடினமாக மற்றவர்களுக்கு இருக்கும். இவர்கள் என்ன சொன்னாலும் அது பலிக்கும். காணாமல் போனவைகளைப் பற்றி கூறும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. மந்திர தந்திரங்களில் இவர்கள் வல்லவர்களாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் நட்சத்திரத்திற்கு நீங்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -