
கல்வி காரகணாகவும் ஞான காரகணாகவும் திகழக்கூடியவர் தான் புதன் பகவான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு புதன் பகவான் என்பவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவர் கல்வியறிவில் சிறந்து விளங்குவார் என்றும் உயர் கல்வியை கற்க கூடிய யோகம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்ற வருத்தப்படக்கூடிய பெற்றோர்கள் புதன் பகவானை நினைத்து செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நல்ல கல்வியறிவை தர வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றோர்கள் என்னதான் நினைத்தாலும் பிள்ளைகள் அதை செயல்படுத்த வேண்டும் அல்லவா? ஒரு சில பிள்ளைகளால் அவர்களுடைய கல்வியில் சிறந்து விளங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மந்த புத்தி ஏற்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதற்கு புதன் பகவானின் அருளை பெற வேண்டும். புதன் பகவானுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று புதன் பகவானை வழிபாடு செய்யும்பொழுது புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஜூன் மாதம் 11-ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
ஜூன் மாதம் 11ஆம் தேதி என்பது புதன்கிழமை. மேலும் அன்றைய தினத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரம் என்பது கேட்டை நட்சத்திரம். இது புதன் பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. புதன் பகவானுக்குரிய கிழமையும், நட்சத்திரமும் ஒரு சேர வரக்கூடிய இந்த நாளில் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக சில வழிபாடுகளையும், தானங்களையும் நாம் செய்யும் பொழுது அதன் பலன் அதிகளவிலும் அதே சமயம் விரைவிலயும் கிடைக்கும்.
அன்றைய தினம் புதன் ஹோரையில் அருகில் நவகிரகங்கள் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அந்த நவகிரகங்களில் இருக்கக்கூடிய புதன் பகவானுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் புதன் பகவானுக்குரிய தானியமான பச்சைப் பயிரை சுண்டலாக தயார் செய்து நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தருவதன் மூலம் புதன் பகவானின் அருளைப் பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் புதன் பகவான் கல்விகாரகன் என்பதால் வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், பை போன்றவற்றை வாங்கி தானமாக தருவதன் மூலம் புதன் பகவானின் அருள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பணவரவு தரும் ஸ்லோகம்
மிகவும் எளிமையான வழிப்பாடாகவும் தானமாகவும் திகழக்கூடிய இந்த வழிமுறையை முழுமனதோடு யார் ஒருவர் ஜூன் மாதம் 11-ம் தேதி செய்கிறார்களோ அவர்களுடைய குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.