- Advertisement -
சமையல் குறிப்புகள்

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள காரசாரமான இந்த ‘மிளகாய் சட்னி’ பேச்சிலர்ஸ் கூட எளிதாக 10 நிமிடத்தில் செய்து விடலாமே!

- Advertisement -

இட்லி, தோசைக்கு சதா தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடுவதை விட, காரசாரமாக தக்காளி சட்னி, வெங்காய சட்னி, மிளகாய் சட்னி என்று விதவிதமாக செய்து சாப்பிட்டால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் இப்படி ஒரு மிளகாய் சட்னியை புதிதாக செய்து பாருங்கள்! பிறகு அடிக்கடி செய்து சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமல்ல, வேலைக்கு செல்லும் பெண்கள், பேச்சுலர்ஸ் என்று அனைவருமே அவசரமான நேரத்தில் கூட சட்டென செய்து ருசியாக சாப்பிட்டு விடலாம்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

‘மிளகாய் சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 15, வெங்காயம் – 3, தக்காளி – 3, புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு, பெருங்காயம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவிற்கு, உப்பு – தேவையான அளவிற்கு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, பூண்டு – 3 பல், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 2.

- Advertisement -

‘மிளகாய் சட்னி’ செய்முறை விளக்கம்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்க வேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பூண்டை தோலுடன் சேர்த்தால் நன்றாக இருக்காது. வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், கொத்தமல்லி மற்றும் புளி, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு கொர கொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிக்கவும். பின் உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வர மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு அதில் ஒரு கப் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

- Advertisement -

அவ்வளவு தாங்க! ரொம்ப ரொம்ப சுலபமா செய்யக் கூடிய இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசைக்கு மட்டும் அல்லாமல் கெட்டியாக செய்து வைத்தால் சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அத்தனையும் ஜீரண சக்திக்கு உதவக் கூடியவை. அஜீரண கோளாறுகளை தடுத்து காலையிலேயே நம்மை புத்துணர்வாக வைத்துக் கொள்ள உதவும்.

பொதுவாக சட்னி வகைகளில் கூடுமானவரை பச்சை மிளகாய் சேர்ப்பதை தவிர்ப்பது தான் நல்லது. பச்சை மிளகாய் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக காய்ந்த மிளகாய்களை சேர்த்தால் உஷ்ணம் தணியும். காய்ந்த மிளகாயில் கூட குண்டு மிளகாய் சேர்ப்பதை விட, வர மிளகாய் சேர்த்தால் இன்னும் நல்லது. நாவிற்கு ருசியாக காரசாரமாக செய்யக் கூடிய இந்த மிளகாய் சட்னி நீங்களும் இனி அடிக்கடி செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

- Advertisement -