
காலம் மாறுவதற்கு ஏற்ப நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. சத்தே இல்லாத வெறும் சாப்பாட்டை மட்டும் தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் சத்தான உணவு பொருட்களையும் தினம்தோறும் நம்முடைய சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலுக்கு வலிமையை கொடுக்கும். அந்த வரிசையில் ஒரு ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய எள்ளு பொடி செய்வது எப்படி. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உடலுக்கு வலிமையை கொடுக்கக் கூடிய எள்ளு, கருப்பு உளுந்து, கருவேப்பிலை சேர்த்து இந்தப் பொடியை செய்யப் போகின்றோம். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்தை சேர்த்து செய்யுங்கள். வெள்ளை எள்ளுக்கு பதிலாக கருப்பு எள்ளு சேர்த்து செய்யுங்கள். அப்போதுதான் முழுமையான சத்தினை நம்மால் பெறமுடியும்.
சரி, முதலில் இந்த பொடி செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். கருப்பு உளுந்து – 200 கிராம், கருப்பு எள்ளு – 150 கிராம், கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, வரமிளகாய் – 15, பெருங்காயம் கட்டி – 2 பின்ச், தேவையான அளவு உப்பு. (இந்தப் பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ரோஸ்ட் தான் செய்ய வேண்டும்.)
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அந்த கடாய் சூடானதும் முதலில் கருப்பு எள்ளை அதில் கொட்டி வறுத்து எடுக்கவேண்டும். எள்ளு கருகி விடக்கூடாது. எள்ளு கடாயில் கொட்டியதும் படபடவென பொரியும். நன்றாக பொரிந்து வந்தவுடன் அதை ஒரு தட்டில் உடனடியாக மாற்றி விடுங்கள்.
அடுத்தபடியாக கருப்பு உளுந்தை வறுத்து எடுக்க வேண்டும். கருப்பு உளுந்து நன்றாக வறுபட்டு பொன்னிறமாக மாறி, வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். ஒரு உளுந்தை எடுத்து வாயில் போட்டு அதை மென்று சாப்பிடும் அளவிற்கு பக்குவம் வர வேண்டும்.
அடுத்தபடியாக கருவேப்பிலையை கடாயில் போட்டு கருவேப்பிலை மொறுமொறுவென வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வரமிளகாயுடன், கல் உப்பை சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் சூட்டில் பெருங்காய கட்டிகளை போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டி சூடு ஆற வைத்துவிடுங்கள். இந்த பொருட்கள் அனைத்தும் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளு பொடி தயார். இதை ரொம்பவும் நைசாக அரைத்துக் கொள்ள கூடாது. ரொம்பவும் கொரகொரப்பாக அரைத்து கொள்ள கூடாது.
இந்தப் பொடியை இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றி குழைத்து தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் எள்ளு சாதம் செய்யவும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் தாளித்து வடித்து ஆற வைத்த சாதத்தை கடாயில் கொட்டி, மேலே எள்ளுப் பொடியைத் தூவி, கலந்து கலவை சாதமாகவும் சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம். புளி சாதம் செய்யும் போது இரண்டு ஸ்பூன் அளவு இந்தப் பொடியை அந்த புளி சாதத்தோடு கலந்து விட்டாலும் அட்டகாசமான புளி சாதம் கிடைக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.