
வம்சம் தழைக்க முப்பத்து, முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்க, குடும்பம் செழிக்க வீட்டில் கோ பூஜை தவறாமல் செய்து வருவது அவசியமாகும். கோமாதா பூஜை செய்பவர்களுக்கு துன்பமில்லாத நிறைவான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. முன்பெல்லாம் கோ பூஜை செய்வது ரொம்பவும் எளிதானதாக இருந்தது. இப்போது எல்லோருக்கும் சாத்தியம் இல்லாதது என்றாலும், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் தெரிந்தால் நீங்களே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். கோ பூஜை செய்வது எப்படி? கோ பூஜை செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.
இந்த உலகில் இரண்டு இடங்களில் மட்டுமே முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஒரே இடத்தில் காண முடியும். ஒன்று பசுவிடம், மற்றொன்று வேத மந்திரங்கள் ஜெபிக்கப்படும், சம்பிரதாயங்களோடு நடத்தப்படும் திருமண மேடையில் காணலாம். இந்த இரண்டு இடங்களிலும் எல்லா விதமான தேவர்களும் தங்கள் அருளை கொடுப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க, சுற்றிலும் 33 கோடி தேவர்களும் ஆசிர்வாதம் கொடுப்பார்கள். பசுவை தொட்டு வணங்குபவர்களுக்கும் இவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். அத்தகைய பசுவிற்கு தினமும் புல்லை தானமாக கொடுத்து வருவது வம்ச விருத்தியை கொடுக்க வல்லது. கோமாதாவிற்கு தினமும் தவறாமல் புல்லை கொடுத்து வருபவர்களுக்கு வம்சம் தழைத்தோங்கும்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் தினமும் பசுவிற்கு புல்லை கொடுப்பது என்பது சாத்தியமற்றது என்பதால், வாரம் ஒரு முறையாவது வெள்ளிக் கிழமையில் கோசலைக்குச் சென்று அல்லது பசு வளர்ப்பவர்களிடம் சென்று புல் கட்டு ஒன்றை உங்கள் கைகளால் தானம் செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் கோமாதா சிலையை வைத்து அதற்கு பாலால் அபிஷேகம் செய்து, சந்தன குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து, தீப, தூப, ஹாரத்தி காண்பித்து வாருங்கள்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தோறும் பசு மாட்டிற்கு தானம் கொடுக்க வேண்டும். அமாவாசையில் அகத்திக்கீரையும், பௌர்ணமியில் பச்சரிசி கலந்த வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றையும் தானம் செய்ய வேண்டும். வீட்டில் எளிதாக கோ பூஜை செய்வதற்கு சிலை போதுமானது அல்லது கோமாதா படம் வைத்திருந்தாலும் அதை தெய்வமாக பாவித்து பூஜை செய்து வாருங்கள்.
இதையும் படிக்கலாமே:
கடனை அடைக்கும் கிராம்பு எண்ணெய்
பஞ்சகவ்ய விளக்கால் கோ பூஜை செய்ய வேண்டும். பஞ்சகவ்ய விளக்கு என்பது பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய ஐந்து பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் விளக்காகும். இந்த விளக்கை ஏற்றி பூஜை செய்தால் ஹோமம் செய்த பலன் கிடைக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த இந்த பஞ்சகவ்ய விளக்கில் பால், தயிர், நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகியவை அடங்கியுள்ளது. இதில் பால் சந்திர பகவானையும், தயிர் வாயு பகவானையும், நெய் சூரிய பகவானையும், பசுஞ்சாணம் அக்னி பகவானையும், கோமியம் வருண பகவானையும் குறிப்பதால் மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது. இதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க பலவிதமான நோய்கள் நீங்கும். அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வழிபடுவதற்குரிய எல்லா அமைப்புகளும் இந்த ஒரு கோ பூஜையில் அடங்கியுள்ளது, எனவே தவறாது கோ பூஜை செய்து வம்சம் விருத்தி ஆகி, குடும்பத்தை செழிப்பாக இருக்க செய்யுங்கள்.